சேனாவரையர் அறுவகைத்தொகை மொழிகளையும் பொருளாகக் கொண்டு, உம்மையான் பெயரொடு வினை தொக்கத் தொகையும் உண்டு எனக்கூறி நிலங்கடந்தான், மாக்கொணர்ந்தான் என எடுத்துக்காட்டுக் கூறுவர். அவை எழுவாய் தோன்றாது நின்ற இரண்டாம் வேற்றுமை தொக்குநின்ற தொடர்மொழிகளாவதல்லது தொகைமொழியாகா என்க. அன்றி நிலங்கடந்தான் வந்தான் என்புழித்தொகை மொழியாமே எனின்? அங்ஙனந் தொகைமொழி யாயவிடத்துக் 'கடந்தான்' என்பது வினையாலணையும் பெயராவதல்லது வினையாகாமையறிக. |
தெய்வச்சிலையார் பலபொருள் குறித்த சொற்களைப் பெயரினாகிய தொகை எனக்கொண்டு "யானை குதிரைஉள" என உதாரணம் காட்டி இரண்டு பெயரும், ஒரு பயனிலை கொண்டன என்பார். யானை குதிரை என்பவை செவ்வெண்ணாகத் தொடர்ந்தனவன்றித் தொகையாகாமை தேற்றம். தொகையெனக் கருதின் உம்மைத் தொகையுள் அடங்குமாறறிக. |
இனி வேற்றுமைத்தொகை முதலாய அறுவகைத்தொகை மொழிகளுள் உம்மைத்தொகை ஒழிந்த ஏனையவை பயனிலை கொள்ளுங்கால் பயனிலை கோடற்குரிய சொல் ஒன்றேயாக நிற்கும். அன்மொழித்தொகை அதுவுமாகாமல் நிற்கும். அஃதாவது யானைக்கோடு கிடந்தது என்புழிப் பயனிலை ஏற்றற்குரியது கோடுமட்டுமேயாம். யானை அதற்குரிய அடையாகும். செந்தாமரை பூத்தது, கொல்யானை வந்தது, மதிமுகம் வியர்த்தது என ஏனையவும் அன்ன. பொற்றொடி வந்தாள் என்புழி 'மகடூஉ' எனப்பிறிதொன்றனை நோக்கிநின்றது. அங்ஙனமன்றி முதுகுடுமிப் பெருவழுதி, கரிகாற்பெருவளத்தான் எனவரும் பெயரினாகிய தொகைகளுள் யாவும் பயனிலை கோடற்கு ஏற்ப நிற்குமாறறிக. இத்தொகைப் பெயர்களை ஒருபொருள் குறித்த வேறு பெயர்க்கிளவி (கிளவி-42) எனக்கிளவியாக்கத்துள் விதந்து கூறியமையானும் அறிக. |
இனிப் "பெயரினாகியதொகையும் ... ... உரிய" என்னாது "உளவே, அவ்வும் உரிய" என்றதனான் தொகைப்படாமல், நீல மணியின் நிறம் நன்று. சோழமன்னன் குதிரை நடைசிறந்தது என்றாற்போல எழுவாய் அடையடுத்து வருவனவற்றைத் தொகைச் சொல் நீர்மையவாகக் கொள்க. |