சூ. 68 : | எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி |
| அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப |
[7] |
க-து : | எழுவாய் வேற்றுமைக்குரியதொரு புறனடை கூறுகின்றது. |
உரை :மூவிடத்துப் பெயர்களும் புலனாகத் தோன்றி மேற்கூறிய இலக்கணத்தான் நிற்றல் சிறப்புடையது என்று கூறுவர் ஆசிரியர். புலனாகத் தோன்றுதலாவது ஒலிவடிவு செவிக்கும் வரிவடிவு விழிக்கும் வெளிப்படநிற்றலாம். |
"அவ்வியல்" என்றது அப்பெயர்கள் தனித்தும் தொகையாயும் தோன்றி எழுவாயாய்ப் பயனிலை கொள்ளும் இலக்கணத்தையாம். வெளிப்படநிற்றல் செவ்விது, எனவே வெளிப்படாது நிற்றலும் அதற்கியல்பு என்பது உய்த்துணரப்படும். அது சிறப்புடையதன்று என்றவாறு. இதனைத் தோன்றா எழுவாய் என்ப. இதனான் எழுவாய் வேற்றுமைத் தொகையும் உண்டு என்பதொரு நயந்தோற்றுவித்தார். |
எ-டு :எழுத்தெனப்படுவ... ...என்ப எனவும், "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே" எனவும் வரும். சாத்தன் உண்பானோ என்றவழி, உண்பான் என வழக்கின்கண் எழுவாய் குன்றிவருதல் கண்டுகொள்க. |
பல திறப்பட்டுவரும் படர்க்கைப்பெயர் போல்வனவன்றித், தன்மைப் பெயர் முன்னிலைப்பெயர்கள் வரையறைப்பட்டு வினை முற்றுக்களான் தெற்றெனப் புலப்படுதலின் வெளிப்படாது நிற்பினும் ஒக்குமெனக் கருதற்க. அவையும் வெளிப்பட நிற்றலே தொடர் மொழியாக்கத்திற்குச் சிறப்புடைத்து என அறிவித்ததற்கு 'எவ்வயிற் பெயரும்' என்றார். (வயின்-இடம்) |
எழுவாயை விதந்து கூறியாங்குப் பயனிலைபற்றிக் கூறாமையான் பயனிலை வெளிப்பட்டே நிற்றல் வேண்டும் என்பது புலப்படும். "விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்" (உரி-59) எனப் பயனிலை தொக்கதால்எனின்? அவ்வாறு நிற்பன செய்யுள் விகாரம் என அறிக. |
சூ. 69 : | கூறிய முறையின் உருபுநிலை திரியாது |
| ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப |
[8] |
க-து: | பெயர்வேற்றுமை ஏனை உருபுகளை ஏற்குமாறு கூறுகின்றது. |