வேற்றுமை மயங்கியல்153

"இன்னான் ஏது" என்னும் மூன்றாவது கருவிக்கண்ணும் "இதனினிற்றிது"
என்னும்  ஐந்தாவது  நிலத்தின் கண்ணும் "இதனதிது"  என்னும் ஆறாவது
செயப்படு பொருட்கண்ணும் அடங்குமாதலின் அவற்றை அவற்றுள் அடக்கி
ஓதினார்.    என்னை?   புகை  உண்மையான் நெருப்புண்டு என்னுமிடத்து
நெருப்புண்மை   புகையான்   அறிதலின்   புகை கருவியாக நின்றவாறும்,
மலையின் வீழ் அருவி   என்னுமிடத்து அருவி   மலையின்கண்ணதாதலை
உணர்தலின் மலை இடமாகி நின்றவாறும் சாத்தனது  கை  என்னுமிடத்துச்
சாத்தன் கையை உடையான் என்பது  பொருளாதலின், உடையான் என்னும்
வினைக்குறிப்பான்  அஃது செயப்படு பொருளாதற்கு    ஒத்தவாறும் கண்டு
கொள்க. இங்ஙனம் இவை உருபு  வகையாற்றோன்றாமல் தொடரமைப்பான்
பெறப்படுதலின்     நேரே    உரிமை    பெறாமல்  பிறவற்றைச் சார்ந்து
அடங்கி  நின்றன என்க. "இன்னதற்கு இது பயனாக" என்பவை  தொழிற்கு
நேரே     காரணமாகாமல்     'பொருட்டாக' நிற்றலின் பிரித்து எண்ணிக்
கூட்டப்பெற்றன.
 

தொழில்    முதனிலை   எட்டனுள் செய்வது முதல் வேற்றுமையையும்
வினையும் செயப்படு   பொருளும்  இரண்டாம் வேற்றுமையையும், ஆறாம்
வேற்றுமையையும் கருவி மூன்றாம் வேற்றுமையையும்    நிலமும்  காலமும்
ஏழாம்   வேற்றுமையையும்,   ஐந்தாம்   வேற்றுமையையும்,   இன்னதற்கு
என்பது நான்காம்   வேற்றுமையையும், இது  பயனாக  என்பது இரண்டாம்
வேற்றுமையையும் நான்காம் வேற்றுமையையும் தோற்றுவிப்பனவாகும்.
 

ஆதலின்    வேற்றுமை    ஏழற்கும்    பொதுவாகிய    இச்சூத்திரம்
இவ்வியலின்    கண்ணதாயிற்று. அங்ஙனமாயின்  இதனை வேற்றுமையியல்
இறுதியில்வைக்க எனின்.     வேற்றுமை      மயக்கத்திற்குக்  காரணமும்
இதுவே என்பது புலப்பட ஈண்டுவைத்தார் என்க.
 

வரலாறு : உண்டான்   என்புழித்  தொழில் பலவற்றுள் ஒரு தொழிலை
வரைந்துணர்த்தும் உண் என்னும் வினையடியாகிய   முதனிலை வினையும்,
உயர்திணை   ஆடூஉ  ஒருமையாகிய  செய்வதும் உண்ணுதற்றொழிற்குரிய உணவு  என்னும்   செயப்படு   பொருளும்   அத்தொழில்  நிகழ்தற்குரிய
இடமாகிய   நிலனும் அத்தொழிலின் (இறந்த) காலமும்  -  வினைமுதற்குத்
துணைபுரியும் கையும்    வாயுமாகிய    கருவியும்,    பசிக்கு    அல்லது
வயிற்றுக்கு    என்னும் கோடற்     பொருளாகிய  இன்னதற்கு என்பதும்,
சுவைத்தல் அல்லது   உடலோம்பல் என்னும்   இது   பயனாக என்பதும்
தோன்றியவாறு காண்க.