6) பவளவாய், திரிதாடி, அறுகால் என்பவை, வாயினை உடையாளையும் தாடியை உடையானையும், கால்களையுடைய வண்டினையும் உணர்த்தின. பவளம், திரிபு, ஆறு என்பவை அவற்றிற்கு அடையாக வந்து அவற்றை விளக்கி நின்றன. இது இருபெயரொட்டு. இவற்றுள் பவளவாய், திரிதாடி என்பவை அன்மொழித் தொகையல்லவோ எனின் அல்ல. வாயும், தாடியும், இயைபுடையவாய்ச் சினையிற்கூறும் முதலறி கிளவிகளாய் நிற்றலின் அன்மொழியாகா என்க. பால்வளை - பால்போலும் வெள்ளிதாகிய வளையலை அணிந்தாள். பெய்வளை - பெய்த வளையலை அணிந்தாள் என்றாற் போல இயைபின்றிவரின் அவை அன்மொழித்தொகையாதற்கு ஏற்குமென்க. பிறவிளக்கங்களைத் தொகைமொழி இலக்கணங்கூறும் எச்சவியலுட்கண்டு கொள்க. வகரக்கிளவி, பெயர்ச்சொற் கிளவி என்பனவும் இருபெயரொட்டாகுபெயராம். இவற்றை முன்மொழி (கிளவி) ஆகுபெயர் என்றும் கூறுவர். |