ஞ ந ம என்பவை உயர்திணை மருங்கிற் பெயராய் வாராமையானும் வகரம் சுட்டுப்பெயராயும் உரிச்சொல்லாயுமன்றி இயற்பெயராய் வாராமையானும் விலக்குண்டன. இச்சூத்திரத்தை வினையினும் பண்பினும் என்னும் சூத்திரத்தின் பின்வையாது ஈண்டு வைத்தார், கூறப்பெற்ற புள்ளியீறுகள் பிறவாறும் விளிகொள்ளும் என்னும் இலக்கணம் அதிகரித்தற் பொருட்டென்க. |
சூ. 131 : | அவற்றுள் |
| அன்என் இறுதி ஆவா கும்மே |
[13] |
க-து : | னகர ஈற்று உயர்திணைப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. |
|
உரை :விளிகொள்ளும் புள்ளியீறுகளுள் அன் என்னும் இடைச்சொல்பற்றி நிற்கும் பெயரினது ஈறு ஆவாகத் திரிந்து வரும். |
எ-டு :(தோழன்) தோழா வருக ! (சேர்ப்பன்) சேர்ப்பா வருக ! எனவரும். |
"ஏனைப்புள்ளியீறு" என்றதனான் முறைமை சுட்டா மகன் என் கிளவி, படிவ உண்டிப் பார்ப்பன மகனே ! எனவும், மன்னன் என்பது மன்னனே ! மன்னவனே ! எனவும் கிழவன் என்பது கிழவோய் ! கிழவோயே ! எனவும் வருதலையும், ஒன்றென முடித்தல் என்னும் உத்தியான் தம்முன,் எம்முன் என்னும் முறைப் பெயர் தம்முனா ! எம்முனா ! என வருதலையும் கொள்க. |
சூ. 132 : | அண்மைச் சொல்லிற்கு அகரமு மாகும் |
[14] |
க-து : | இதுவுமது. |
|
உரை: அன்னீற்றுப் பெயரீறு அண்மை விளிக்கண் அகரமாகத் திரிதலும் ஆகும். திரிதலாவது குன்றலாம். உம்மையாற்றிரியாது நிற்றலே பெரும்பான்மை எனக் கொள்க. |
எ-டு :(துறைவன்) துறைவ கேள் ! எனவும் துறைவன் வருக ! எனவும் வரும். "ஏனைப்புள்ளியீறு" என்றதனான் நம்பன் என்பது நம்பான் என ஈற்றயல் நீண்டு வருதலும் கொள்க. |
சூ. 133 : | ஆன்என் இறுதி இயற்கை யாகும் |
(15) |
க-து : | இதுவுமது. |