விளி மரபு171

இகர  ஈறு  நீண்டு அளபெடுத்தவழி ஈகாரஈறாகாமல் இகர ஈறாக நின்று
திரிபின்றி    விளிவேற்றுமையாகும்     என்பதனொடு      மாட்டெறிந்து
கூறினமையான் அழாஅன்,  புழாஅன் என்னும்   இயற்கை   அளபெடைச்
சொற்களாயினும்,   மலையமாஅன்,     சேரமாஅன்  என்னும்  இசைநிறை
அளபெடைச்    சொற்களாயினும்  அவை  அன்னீறாகவே கொள்ளப்படும்
என்பது  பெறப்பட்டது.  அவ்வழி  அன்னீற்றிற்கு     ஓதிய  ஆஓவாகத்
திரியும் விதியைப் பெறாமல் இயல்பாக நின்று விளியேற்கும் என்றவாறாம்.
 

எ-டு :அழாஅன் வருக ! மலையமாஅன் வருக ! என வரும். ஒப்பின்
முடித்தல்     என்னும்     உத்தியான், ஒன்  சாரியை  பெற்றுக் கோஒன்
எனவரும்        பெயரும்    'பேஎன்'   என   உயர்திணை  மருங்கின் அளபெடுத்துவரும்    பெயரும்  இயல்பாக விளியேற்கும்  எனக் கொள்க.
அளபெடையை ஆனீறாகக் கருதி உரையாசிரியன்மார் கூறும்  விளக்கங்கள்
இந்நூல் நெறிக்கு ஒவ்வாமையறிக.
 

சூ. 137 :

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே  
(19)
 

க-து :

இதுவுமது.
 

உரை:  னகர ஈற்று முறைப் பெயராக வரும் சொல்லிறுதி ஏகாரத்தொடு
பொருந்தி வரும்.
 

எ-டு :மகன்   என்பது    மகனே  வருக !  எனவரும். பெருமகனே, மருமகனே, தலைமகனே என அடையடுத்துவரினும் ஒக்கும்.
 

சூ. 138 :

தான்என் பெயரும் சுட்டுமுதற் பெயரும் 

யானென் பெயரும் வினாவின் பெயரும் 

அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே  

(20)
 

க-து :

னகர ஈற்றுள் விளியேலாப் பெயர்கள் ஆமாறு கூறுகின்றது.
 

உரை :தான்   என்னும்   படர்க்கைப் பெயரும்  சுட்டினை முதலாகக்
கொண்ட  அவன்  இவன்  உவன்  என்னும்  பெயர்களும், யான் என்னும்
தன்மைப்  பெயரும், யாவன்  என்னும்  வினாப்  பெயரும்  ஆகிய  அவ்
அனைத்துப் பெயர்களும் விளிகொள்ளுதல் இலவாம்.
 

சூ. 139: 

ஆரும் அருவும் ஈரொடு சிவணும் 
(21)
 

க-து :

ரகர   ஈற்று   உயர்திணைப்   பெயர்கள்   விளி  ஏற்குமாறு
கூறுகின்றது.