சூ. 154 : | அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் |
| அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் |
| விளியொடு கொள்ப தெளியு மோரே |
[36] |
க-து : | பெயரேயன்றி 'அம்ம' என்னும் இடைச்சொல்லும் பெயரைச் சார்ந்து நின்று விளியேற்கும் என மரபு கூறுகின்றது. |
|
உரை: புணர் மொழிக்கண் "உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்" (தொகைமரபு-10) எனக்கூறப் பெற்ற 'அம்ம' என்னும் இடைச் சொல்லினது நீட்டமாகிய 'அம்மா' என்னும் சொல் மேற்கூறிய முறையாகிய மூவகைப் பெயரொடு ஒன்றாகப் பொருந்தாதாயினும் "அம்ம கேட்பிக்கும்" என்னும் அதன் பொருள் நிலையைத் தெளித்தோர் அதனை விளி கொள்ளும் பெயரொடு சார்த்திக் கொள்ளுவர். 'அம்முறைப் பெயர்' என்றது முன்னர் விளிகொள்ளும் பெயராகக் கூறிய உயர்திணைப்பெயர், அஃறிணைப் பெயர், பொதுப் பெயர்களை. |
எ-டு : அம்மா சாத்தா ! அம்மா கொற்றா ! எனவரும். சாத்தா கொற்றா! என விளிக்கப்பட்ட பெயர்களைச் சார்ந்து விளிகோடலின் "விளியொடு கொள்ப" என்றார். "அம்மகேட் பிக்கும்" என வினைப்பண்பு இதன் பொருளாக ஓதப்பட்டமையின் 'அம்மா' என நீண்டவழிப் பெயர்ப்பண்புடையதாயிற்றுப் போலும் என நிகழும் ஐயம் நீங்க ஆண்டும் அஃது வினைப் பண்பினதே என்றுணர 'அம்முறைப் பெயரோடு சிவணாது' என்றும், விளிப்பெயர் ஒப்ப ஈறுதிரிந்து நிற்றலின் விளிப்பெயரோடு சார்த்திக் கொள்ளல் வேண்டுமென்பது உணர "ஆயினும் விளியொடு கொள்ப" என்றும் கூறினார். இச்சூத்திரத்தின் இரண்டாவது அடி "அம்முப் பெயரொடு சிவணா தாயினும்" என்றிருந்து ஏடெழுதுவோரான் அம்முறைப் பெயர் எனத் திரிந்திருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. |
இனி "அசைச்சொல் நீட்டம்" என்பதன்கண் உம்மை தொக்கதாக வைத்து அம்மஎன்னும் அசைச் சொல்லும் அதன் நீட்டமும் எனப் பொருள் கொண்டு அம்ம வாழி தோழி ! என அண்மைவிளி ஏற்று நின்றதாகக் கொள்க. |
சூ. 155 : | தநநு எயென அவைமுத லாகித் |
| தன்மை குறித்த னளரவென் இறுதியும் |
| அன்ன பிறவும் பெயர்நிலை வரினே |
| இன்மை வேண்டும் விளியொடு கொளலே |
(37) |
க-து : | உயர்திணைப் பெயர்களுள் விளியேலாதவை இவை எனக் கூறுகின்றது. |