சூ. 114:திருவாசகம் - திருவாய்மொழி பாக்களை உணர்த்தின் அடையடுத்த ஆகுபெயர், நூல்களை உணர்த்தி நிற்பின் அன்மொழித்தொகை என்றார் (பக்-159) வாசகம், வாய்மொழி அவற்றானாகிய பாக்களை உணர்த்த-அப்பாக்கள் அவற்றான் ஆகியநூலை உணர்த்துதல் இருமடியாகுபெயர் என்று கோடற்கண் தவறு யாது என்பது ஆராயற்பாலது. |
சூ. 116:நச்சினார்க்கினியர் தண்டூண் ஆதற்குக் கிடந்தது தண்டூண் எனவும் பாவையினும் அழகியாள் பாவை எனவுமே குறிப்பிட்டுள்ளார் தண்டூண்கிடந்தது-பாவை வந்தாள் என்று உதாரணம் காட்டவில்லை. (பக்-161) |
சூ. 69:கூறிய...... என்ப ஆறு உருபுகளும் தத்தம் தன்மை (வடிவு) திரியாமல் பெயரின்கண் இறுதியாக வந்து புணர்ந்து நிற்கும் இயல்பினவாகும் என்று பொருள் கூறியவர் இயற்கை என்றது அங்ஙனம் உருபுகளை ஏற்றுநிற்கும் இலக்கணத்தை! என உருபின் இலக்கணத்தைப் பெயரிலக்கணமாக மாற்றிக் கூறுவது பொருந்துமா? (பக்-99)20 |
சூ. 67:'பெயரினாகிய தொகை' என்று இவ்வுரைகாரர் குறிப்பிடும் ஒரு பொருள் குறித்த பல பெயர்த் தொகுதிகளுள் உள்ள பெயர்கள் யாவும் பயனிலை கோடற்கு ஏற்ப நிற்குமாறு அறிக என்றார். இந்நிலை சாரைப் பாம்பு, தென்னைமரம் முதலிய இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் உண்டு. எனவே அறுவகைத் தொகையுள் பயனிலை கோடற்குரிய சொல் ஒன்றேயாக நிற்கும் என்ற கருத்து முழுமையாகப் பொருந்துவதன்று.21 |
சூ. 104:பிறிது ... என்பது உருபுகளின் நிலைபற்றியதொரு புறனடை என்று உரைகாரர் குறிப்பிட்டு விளக்குகிறார். இதனை ஆசிரியர் கருத்தாகக் கொள்ளவேண்டுமாயின் இது வேற்றுமை மயக்கப் புறனடைக்கு முன்னர் (சூ. 101) அமைந்திருத்தல் வேண்டும். இந்நூற்பாவிற்குத் தெய்வச்சிலையார் உரை பொருந்தமானதே. அவர் கருத்து உருபுகளுக்குக் கூறிய சூத்திரங்களான் பெறப்படும் என்பது ஆராயத்தக்கது. |
|
20. ஈண்டுப்பெயர் என்றது எழுவாய் உருபைக் கருதியது. |
21. தொகைமொழி - தொகை நிலைத்தொடர் இவை மேலும் விளக்கப்படல் வேண்டும் எனத் தெரிகின்றது. |