பெயரியல்181

களைக்   காட்டி  உரையாசிரியன்மார்  ஐயமெழுப்புதலும் அமைதி கூறலும்
ஈண்டைக்கு  வேண்டற்பாலன அல்ல. இது முதலாக ஐந்து சூத்திரங்களைக்
கிளவியாக்கத்துட் கூறாமை பற்றிச் சேனாவரையர்   கூறும்  தடைவிடைகள் தேவையற்றவை. இச்சூத்திர    விளக்கமாகத்   தெய்வச்சிலையார் கூறுவன இந்நூல் நெறிக்கேலாதவை என்க.
 

சூ. 157 :

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
[2]
 

க-து :

சொல்  தன்னையும்  பொருளையும்  உணர்த்துமாறும்  ஆண்டு
நிகழ்வதோர் ஐயம் நீங்குமாறும் பற்றிக் கூறுகின்றது.
 

உரை :சொல் கருவியாகத்  தன்னின்  வேறாகிய  பொருளை அறிந்து
கோடாலும் இஃது  இன்னசொல் என அச் சொல்லின்  தன்மையை அறிந்து
கோடாலும்   ஆகிய   இரண்டும்   பொருள்  குறித்து  வருமென்ற  அச்
சொல்லானே விளக்கமாகும் என்று கூறுவர் புலவர்.
 

எ-டு : நம்பி, வந்தான்,  பெறுகதில்,   உறுகால்  என்பவை  முறையே
உயர்திணை  ஆடூஉ  எனவும்,  உயர்திணை  ஆடூஉவின் வருதற்றொழில்
நிகழ்ந்து  முடிந்தது  எனவும்,   பெறுதலை விழைகின்றேன் எனவும் மிக்க
காற்று எனவும் பொருளுணர்த்தி நின்றவாறும். "நீயென்  கிளவி  ஒருமைக்
குரித்தே" எனவும், "செய்கென்  கிளவி வினையொடு முடியினும்" எனவும்.
"உம் உந் தாகும்  இடனுமா  ருண்டே"   எனவும்   "வயாவென்   கிளவி
வேட்கைப் பெருக்கம்" எனவும் நின்றவற்றுள் நீ-செய்கு-உம்-வயா என்பவை
பிற   பொருளுணர்த்தாமல்   முறையே   பெயர்ச்சொல்,   வினைச்சொல்,
இடைச்சொல் உரிச்சொல் எனத் தம்மையே உணர்த்தி நின்றவாறும்  கண்டு
கொள்க.
 

இனிக் "கூறிய  முறையின்  உருபுநிலை  திரியாது  ஈறுபெயர்க் காகும்"
என்னுமிடத்துப்  பெயர்   என்னும்   சொல்   பிறபொருட்பெயர்களையும்,
தன்னையும் ஒருங்குணர்த்தி நின்றதாம்.
 

சொல்லினது பொருளைத்  தெரியுங்கால் சொல் உணர்வு  மறைந்தும் -
சொல்வகையைத்  தெரியுங்கால்  பொருள்  உணர்வு  மறைந்தும்  நிற்கும்,
ஆதலின் இவை சொற்களின் வகையல்ல - அவற்றின் இலக்கண நிலை என
அறிக.  ஒவ்வொரு  சொல்லும்  இங்ஙனம்  இரு  நிலைமை  எய்தும் என
உணர்த்தியவாறாம்.    சொல்    தன்னை    உணர    நின்ற    வழியும்
பொருளுளுணர்த்தியதேயாம் என ஐயமகற்றியவாறும் கண்டுகொள்க.