வகைகளை உணர்த்தி நின்றது, ஓரன்ன உரிமை என்பது உயர் திணையாதற்கும் அஃறிணையாதற்கும் சமனாகநிற்கும் நிலைமையை. இங்ஙனம் இருதிணைக் கண்ணும் விரவுதலின் அவ்வகையினை விரவுப் பெயர் என்றும், பொதுப்பெயர் என்றும் கூறுவர். எனவே பெயர்ச் சொற்கள் உயர்திணைப் பெயர் அஃறிணைப்பெயர், விரவுப்பெயர் என மூவகைப்படும் என்பதாயிற்று. |
அவை வருமாறு : அன்னவன், அன்னவள், அரசர், வணிகர், கரியது, கரியன, என இவை னஃகான் ஒற்று முதலியவாக ஓதியவற்றான் பாலுணர வந்தன, நம்பி, நங்கை, கோ, வேள் என இவை பிற ஈறுகளான் பாலுணர வந்தன. பெண்மகன், மக்கள், பெண்டு என்பவை ஓதப்பெற்ற ஈறுகளான் வந்து அவற்றிற்குரிய பால் காட்டாமல் வேறுபால் உணர்த்தி நின்றன. பிறவும் சான்றோர் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. |