பெண்டாட்டி, ஆடூஉ, மகடூஉ என வரும் ஈறுகள் இருபாற்கும் உரியவாய் வருதலின் ஈறுபற்றி ஓதாது பெயர்பற்றி ஓதினார் என விளக்கங் கூறினார். அஃது ஆசிரியர் கருத்தாகாமை "பாலறி வந்த உயர்திணைப் பெயரே" எனவும் "பாலறி வந்த அஃறிணைப் பெயரே" எனவும் பின்னர்க் கூறு மாற்றான் அறிக. 'ஒப்பக் கூறல்' என்னும் உத்தியான் ஐம்பாற் பகுப்பையும் உணர்ந்து கொள்ள வைத்தார் என்க. மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். |
சூ. 164 : | ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் |
| பெண்மை யடுத்த மகளென் கிளவியும் |
| பெண்மை யடுத்த இகர இறுதியும் |
| நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் |
| முறைமை சுட்டா மகனும் மகளும் |
| மாந்தர் மக்கள் என்னும் பெயரும் |
| ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் |
| சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் |
| அவை முதலாகிய பெண்டன் கிளவியும் |
| ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ |
| அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன |
[9] |
க-து : | இதுவுமது. |
|
உரை :ஆண்மையடுத்த மகனென் கி ள வி முதலாக ஒப்பொடுவரூஉம் கிளவி ஈறாக ஓதப் பெற்றனவாய் வரும் அப்பதினைந்து சொற்களும் பால் விளங்க வந்து நிகழும் உயர்திணைக்கு உரிய பெயர்ச்சொற்களாம். |
ஆண்மையடுத்த மகனென் கிளவி என்றது ஆண்மைப் பண்பை உணர்த்தும் சொல்லாகிய ஆண் என்பதனைத் தொடர்ந்து நிற்கும் மகன் என்னும் பெயர் என்றவாறு. அஃதாவது இருபெயரொட்டன்று என்றதாம். இவற்றைப் பிரிப்பின் ஒவ்வொன்றும் விரவுப்பெயராதலின் ஆண்மையடுத்த மகனென் கிளவி என விளங்கக் கூறினார். பெண்மையடுத்த மகளென் கிளவி என்பதற்கும் இவ்விளக்கம் ஒக்கும். அவை முறையே ஆண்மகன் - பெண்மகள் எனவரும். |
"பெண்மை யடுத்த இகரஇறுதி" என்பது பெண் என்னும் பண்புச்சொல்லைத் தொடர்ந்து நிற்கும் ஆள்வினையொடு கூடிய இகர ஈற்றுப் பெயர் என்பதாம். அஃது பெண்டாட்டி எனவரும். |