இவ்இகர ஈறு பெண்ணென்னும் சொல்லொடு நேரேதொடராமல் ஆளுதல் வினைப்பண்புணர்த்தும் உரிச்சொல்லொடு கூடி ஆட்டி எனவருமென்பது தோன்றப் பிரித்துக் கூறினார். அதனான் பெண்தன்மையை அடுத்து இவ்வாறு இகர இறுதியாகத் திருவாட்டி, பெருமாட்டி எனவும் வரும். தலைவி, தோழி, கிழத்தி, செவிலி, விறலி, பாடினி, ஒருத்தி முதலாயினவும் பெண்மையடுத்த இகர இறுதியாக அடங்குமென்க. |
இவ்வாறு வருவன விரவுப் பெயராதற்கும் ஒக்குமன்றோ எனின் ? பயனும் சிறப்புங் கருதி ஓராவினையும் பெற்றத்தையும் அவள், அவன் எனக் கூறுதல் போல இவை அஃறிணைக்கண் வழங்கப்படுதலன்றி முடவன் முடத்தி என்றாற்போல இருதிணைக்கும் ஒத்த உரிமையவாய் வருவன அல்ல என்பதை இருவகை வழக்கும் நோக்கி அறிக. இங்ஙனம் கொள்ளாக்கால் சாத்தி - கொற்றி என்றாற்போல வரும் பெயர்கள் பெண்பால் உணர்த்துதற்கு ஏலாவாய்க் குன்றக்கூறலாய் முடியும் என்க. |
நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரம் என்பது : நம் என்னும் முதனிலையொடு கூடி இகர இறுதியாயும் ஐகார இறுதியாயும் வரும் பெயர்ச்சொற்கள் என்றவாறு. அவை நம்பி - நங்கை எனவரும். |
முறைமை சுட்டா மகனும் மகளும் என்பது : இன்னார்க்கு அல்லது இன்னதற்கு என உரிமை கருதாமல் ஆடூஉ, மகடூஉ என்னும் துணையாய் வரும் பெயர்ச்சொற்கள், அவை - மகனே தோழி என்றனள் (அகம். 48) 'மகள்மறுத்துமொழிதல்' என வந்தவாறு காண்க. |
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் என்பது : மாந்தர் எனவும் மக்கள் எனவும் பன்மை குறித்து வரும் பெயர்ச் சொற்களாம். |
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் என்பது: ஆடூஉ எனவும் மகடூஉ எனவும் ஒருமை குறித்து வரும் பெயர்ச் சொற்களாம். |
சுட்டுமுதலாகிய அன்னும் ஆனும் என்பது : சுட்டிடைச் சொற்களை முதலாகக் கொண்டு பாலுணர்த்தும் ஈற்றொடு தொடர்ந்து, அவன் இவன் என்னும் சுட்டுப்பெயர்களை ஒப்பப் பொருளுணர்த்தி நிற்கும் அன்னீற்று ஆனீற்றுப் பெயர்களாம். |
அவை : அன்னன் இன்னன் எனவும் அன்னான், இன்னான் எனவும் வரும். உகரச் சுட்டிடைச்சொல் முதலாக வரும் உன்னன் உன்னான் என்பவை சிங்க ஈழத்துப் (இலங்கை) பயின்று வருகின்றமை போலத் தமிழீழத்துப் (தமிழகத்துப்) பயின்று வரவில்லை என்க. |