இனிச் சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் என்றதனான் அவை சுட்டெழுத்துக்களை அடுத்துவரின் அவன், இவன், அவான், இவான் என்றன்றே வரல்வேண்டுமெனின், அற்றன்று சுட்டெழுத்துக்களின் அடிப்படையில் வருவன அவன் இவன் உவன் எனப்பிரிப்பப் பிரியா ஒரு சொல்லாக வரும் என்பதுணர " அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும்" என ஆசிரியர் மேல் விதந்து கூறினமையானும், சுட்டெழுத்துக்கள் இடைச்சொல்லாதலின் இடைச்சொற்கள் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும். பிறவுமாகிய இலக்கணத்தை உடையவாதலானும் ஈண்டுச் சுட்டென்றது ஆன், ஈன், ஊன் என்னும் இடம் உணர்த்தும் சுட்டுப்பெயர்களின் திரிபாக வரும் அன், இன், உன் என்பவற்றை என அறிக. இதனை இவரிவர் கூறினார் என்பதை இன்னின்னார் கூறினார் எனவரும் வழக்கானும் அவ்வனைத்தும் என்பதனை அன்றியனைத்தும் என ஆசிரியர் வழங்கலானும் உணர்க. |
இனி, உரையாசிரியன்மார் அன்-இன்-உன் என்னும் சுட்டிடைச் சொற்கள் உளவாதலைக்கருதாராய் இதற்கு அவ்வாளன் இவ்வாளன் உவ்வாளன், அம்மாட்டான் - இம்மாட்டான் - உம்மாட்டான் என்பவற்றை எடுத்துக் காட்டினர். அவற்றுள் அன்னும் ஆனும் முறையே - ஆள் - மாடு என்பவற்றை அடுத்து வந்தனவன்றிச் சுட்டுக்களை அடுத்து வாராமையின் அவை சூத்திரக்கருத்திற்கு ஏலாமை அறிக. |