பெயரியல்191

ஆயத்தார்,  கழகத்தார்  எனவரும்.  அவையத்தான், அவையத்தாள் எனச்
சிறுபான்மை ஒருமைப்பாலாயும்வரும்.
 

வினைப்பெயராவன :-  தொழில்  காரணமாக  வரும்பெயர்கள்.  அவை
உண்டவன்,  தின்றவன்,  உண்டான், தின்றான் எனவரும்.  சாதி  குறியாது
கொல்லன், தச்சன்,  கூத்தன்  என  வருவனவும்  கொள்க.  பெண்பாற்கும்
பலர்பாற்கும் ஒட்டிக்கொள்க.
 

உடைப்பெயராவன :- ஒன்றை  உடையமையாகக் கொண்டிருத்தல் பற்றி
எய்திய   பெயர்.  அவை.  குட்டுவன்,  பூழியன்,  வெற்பன்,   சேர்ப்பன்,
குழையன், வேலன்,   வில்லன்  எனவரும்.   பெண்பாற்கும்,  பலர்பாற்கும்
ஏற்பன அமைத்து ஒட்டிக்கொள்க.
 

பண்புகொள்  பெயராவன :- வன்மை, வடிவு,  சுவை,  அளவு  முதலிய
குணம் பற்றி   வரும்   பெயர்களாம்.  அவை  கரியன், கூனன், இனியன்,
நெடியன்,  நல்லன், தீயன்  எனவரும். பெண்பாற்கும் பலர்பாற்கும் ஒட்டிக்
கொள்க.
 

இவ் அறுவகைப்   பெயரும் ஆடூஉ,   மகடூஉ,   பல்லோர்   என்னும்
மூன்றுபாற்கும்     இயையுமாற்றான்   வரும்    என்பது   உணர   இனி
வருவனவற்றைப் பல்லோர்க் குறித்த என விதந்து கூறினார் என அறிக.
 

பல்லோர்க்குறித்த   முறைநிலைப்  பெயராவன : பன்மை   பற்றிவரும்
முறைப் பெயர்களாம்.  அவை  தாயர்,  தந்தையர்,  தாய்மார்,  தந்தைமார்
எனவும்   மாமன்மார்,   பாட்டன்மார்  என  வழக்கின்கண்   வருவனவும்
மகன்மார், மகள்மார் எனப் பன்மைப் பொருட்டாய் வருவனவும் கொள்க.
 

"கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப
இன்னே வருகுவர் தாயர்"

(முல்லைப்பாட்டு. 15-16)
 

எனஅஃறிணைக் கண்ணும் வந்ததால் எனின்?  ஆண்டு  உயர்த்துக் கூறும்
மரபினான்  வந்தமை 'வருகுவர்'  என்னும்  உயர்திணை   வினைமுடிபாற்
பெறப்படுதலின் சொல்நிலையில் வழுவின்மை அறிக.
 

பல்லோர்க்   குறித்த     சினை   நிலைப்   பெயராவன :  பன்மைப்
பாலாய்ச் சினை காரணமாக முதலுக்கு  எய்திய  பெயர்,  அவை  குருடர்,
செவியர், தலையர், வாயர் எனவரும்.