வினையெச்சங்கள்  வருதல்போல ஒருவர்   என்ற  முற்று  வருதலுக்கு
எடுத்துக்காட்டு    எதுவும்   தரப்பெறவில்லை.    மேலும்   பெயரியலில்
வினைமுற்றைப் பற்றிக் குறிப்பிட இடனில்லை.24
 

சூ. 196:கிழவன், பெரியர், கிழவோன், கிழவோர் என்ற ஆட்சி உண்டு.
ஆனால் கிழவோள் என்ற ஆட்சி உண்டு; கிழவள் என்னும் ஆட்சியில்லை.
அதனைக்  கொள்வதற்கு   அஃது  ஆளப்பட்ட  இடம்  ஒன்றனையாவது
சுட்டியிருத்தல் வேண்டும்.25
 

சூ. 197:இறைச்சி    என்பதற்கு    உள்ளுறை    என்று    பொருள்
கொள்ளப்பட்டமையால்  நூற்பா   உரையில்   எந்தத்   தனிச்   சிறப்பும்
ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்த  நூற்பா வினையும் நோக்க இறைச்சி
என்பதற்குக் கருப்பொருள் என்பதே நேரிய பொருளாகத் தோன்றுகிறது.26
 

சூ. 203:தலைதடுமாற்றமாகத்   தன்மைப்பன்மைவினை  முற்கூறினார்.
தன்மைவினை  உயர்திணைக்கே  உரியதென்பது  அறிவித்தற்குத்  (பக்.221)
தன்மைப்பன்மைவினை   அஃறிணையையும்   உளப்படுத்தல்-   "தன்மைச்
சொல்லே"  "பன்மையுரைக்கும்  தன்மைக்கிளவி"  என்ற   நூற்பாக்களால்
வெளிப்படை.  எனவே  மேலே  குறிப்பிட்ட  விளக்கம்   பொருந்துவதாக
இல்லை.27
 

சூ. 204:உண்டு,  வந்து,   சென்று.   உண்டும்,   வந்தும்,  சென்றும்
என்பவை இறந்தகாலம் காட்டும் என்பார் பவணந்தியார். அங்ஙனம் வருதல்
சான்றோர்  செய்யுட்கண்   காணப்பெறாமையின்  அவை  ஆய்வுக்குரியன
என்கிறார்.  (பக்-223, 4)  உண்ணாநின்றனம்,  உண்கின்றனம்  முதலியவை
(பக்-228) நிகழ்காலம்  பற்றிக்  கின்று,  நின்ற என்ற கால எழுத்துப் பெற்று
வரும்  வினைமுற்றுக்கள்  சான்றோர்  செய்யுட்கண் காணப்பெறுகின்றனவா
என்பது ஆய்வுக்குரியது.28 


24. ஒருவர்   என்னும்   பெயர்   நிலைக்கிளவி    என    ஆசிரியர்
விதந்தமையான் அங்ஙனம் விளக்கம் கூறப்பட்டது.
 

25. 'கிழவோள்'  என்னும்  ஈற்றயல்  நீண்ட பெயருக்குரிய அடிப்படை
வடிவம் 'கிழவள்' எனச் சுட்டப்பட்டது.
 

26. இறைச்சி    ஐவகை   உள்ளுறைகளுள்   ஒன்றென்பதும்   அதன்
இலக்கணமும் பொருளியலுள் விளங்கும்.
 

27. தன்மை வினை உயர்திணைக்கே உரியதென்பதனை நினைவுபடுத்தல்
இதன் நோக்கமாகலாம் என்பது எனது கருத்து.
 

28. உண்ணா    நின்றனம்    முதலியவை    வழக்கிலாயினும்   உள,
உண்டு-உண்டும்   என்பவை    இருவகை     வழக்கினும்       காணல்
அரிதாயுள்ளமையின் அங்ஙனம் சுட்டினாம்.