பெயர்கள் இருதிணைக்கண்ணும் ஆண்மையை மட்டுமே சுட்டி வருதலும் இகர ஈறுபற்றி வரும் விரவுப் பெயர்கள் பெண்மையையே அன்றிச் செவியிலி, முதுகுடுமி என ஆண்மையையும், ஒருமையையும் சுட்டி வருதலுமாகிய சிறப்பு நோக்கிப் பெண்மைப் பெயர் முன்வைக்கப்பட்டது. அஃறிணை இயற்பெயர்கள் யாவும் சாதிப் பெயர்களே யாதலின் அவை பன்மைக் கருத்துடையவேயாம். அங்ஙனம் பன்மைக்குறியீடாகிய சொல்லே ஒருமையையும் உணர்த்திநிற்றல் நோக்கிப் பன்மைப்பெயர் முன் வைக்கப்பட்டதென்க. |
அதனான் உயர்திணையாகிய இனத்தைச் சுட்டும் பெயரை மாந்தர், மக்கள் எனத் தமிழ் நூலார் பன்மைவாய்பாட்டான் ஓதி மாந்தன், மாந்தி, மக்கன், மக்கி என ஒருமைப்பால் ஓதாராயினர். உயர்திணையுள் மாந்தர் என்னும் பெயர்வழிஆடூஉவறி சொல்லும் மகடூஉவறி சொல்லும் பெறுதல் வேண்டிய சான்றோர் மாந்தரன், மாதராள் என ஆக்கஞ் செய்து கொண்டனர். மாந்தரன் என்பது மைந்தன் எனவும் மாதராள் என்பது மாதரார் மாதரி எனவும் இடைக்காலச் சான்றோரான் வழங்கப் பெறலாயின என்க. இந்நெறி பற்றியே தெய்வங்களின் வேறு பட்ட முழுமுதற் பொருளாகிய பரம்பொருளை இறைவன், முனைவன், பரமன் என ஒருமைச் சொல்லான் சான்றோர் வழங்கினர் எனத் தெளிக. |
சூ. 181 : | பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் |
| ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே |
(26) |
க-து : | பெண்மை சுட்டிய பெயர் இருதிணைக்கண்ணும் விரவுமாறு கூறுகின்றது. |
|
உரை : பெண்மை சுட்டி வரும் விரவுப் பெயர் நான்கும் அஃறிணைப் பெண்மைப் பொருள் ஒன்றற்கும், உயர்திணை மகடூஉவிற்கும் பொருந்திய நிலையினவாம். நான்காவன : இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆயவை. ஆண்மை சுட்டிய பெயர்க்கும் இஃதொக்கும். |
எ-டு :சாத்தி வந்தது-சாத்தி வந்தாள். முடத்தி வந்தது-முடத்தி வந்தாள். முடக்கொற்றி வந்தது-முடக்கொற்றி வந்தாள். தாய் வந்தது-மகள் வந்தது. தாய் வந்தாள்-மகள் வந்தாள் எனவும், சாத்தி ஒன்று-சாத்தி ஒருத்தி. சாத்தி இது-சாத்தி இவள் எனவும் வரும். ஒன்று என்பது ஆண்மை பெண்மைகட்குப் பொதுவாயினும் பெண்மை சுட்டிய என்பதனாற் பெண்மைப் பொருள் என்பது பெறப்படும். |