சூ. 182 : | ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் |
| ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே |
(27) |
க-து : | ஆண்மை சுட்டிய விரவுப் பெயர் இருதிணைக்கண்ணும் விரவிவருமாறு கூறுகின்றது. |
|
உரை:ஆண்மை சுட்டிவரும் விரவுப்பெயர் நான்கும் அஃறிணை ஆண்மைப் பொருள் ஒன்றற்கும் உயர்திணை ஆடூஉவிற்கும் பொருந்திய நிலையினவாகும். |
எ-டு :சாத்தன் வந்தது - சாத்தன் வந்தான். முடவன் வந்தது - முடவன் வந்தான். முடக்கொற்றன் வந்தது - முடக்கொற்றன் வந்தான். தந்தை வந்தது - தந்தை வந்தான், மகன் வந்தது - மகன் வந்தான். எனவும், சாத்தன் ஒன்று - சாத்தன் ஒருவன் சாத்தன் இது - சாத்தன் இவன் எனவும் வரும். |
சூ. 183 : | பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் |
| ஒன்றே பலவே ஒருவர் என்னும் |
| அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே |
(28) |
க-து : | பன்மை சுட்டிய விரவுப் பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு கூறுகின்றது. |
|
உரை :பன்மை சுட்டிவரும் மூன்று பெயரும் அஃறிணைப் பொருள் ஒன்றற்கும், அத்திணைப்பலவிற்கும் உயர்திணை ஆடூஉ மகடூஉ வாகிய இரண்டற்குமுரிய ஒருவர் என்று சொல்லப்படும் அவ் விருபாற்கும் ஒத்த உரிமையவாம். |
மூன்றாவன:- இயற்பெயர் - சினைப்பெயர் - சினை முதற்பெயர் ஆகியவை. ஒருமை சுட்டிய பெயர்க்கும் இஃதொக்கும். |
"ஒன்று - பல" என்றதனான் அவை அஃறிணை என்பதும் 'ஒருவர்' என்றதனான் அஃது உயர்திணை என்பதும் பெறப்பட்டன. "ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை" (பெயரியல்-31) என்பதனான் ஒருவர் என்றது ஆடூஉ மகடூஉ வாகிய இரண்டும் என்பது புலப்படும். |
அகரச்சுட்டு 'அன்றி' எனத்திரிந்து நின்றது. உரையாசிரியன்மார் என்றிப்பாற்கும் எனப்பாடங்கொண்டனர். "என்னும்" என முற்கூறிய பின்னர் அப்பொருட்டாகிய என்று என்பதனைப் பின்னும் கூறுதல் பொருந்தாமையறிக. அன்றி என்னும் அகரச் சுட்டினது இன்றியமையாமையை அவர் ஓர்ந்திலர். |