ஒன்றே பலவே என்னும் ஏகாரம் எண்ணேகாரம். "பாற்கும்" என்னும் உம்மை எச்சவும்மை. இவ்வும்மையை எண்ணும்மையாகக் கருதி மயங்கினர் உரையாசிரியன்மார். |
எ-டு : யானை வந்தது - யானை வந்தன, யானை வந்தாள் - யானை வந்தான் எனவும், நெடுங்கழுத்தல் வந்தது - வந்தன, வந்தாள் - வந்தான் எனவும் பெருங்கால் யானை வந்தது - வந்தன - வந்தாள் - வந்தான் எனவும் வரும். |
அஃறிணை இயற்பெயர்களே பன்மை விரவுப் பெயராக வருதற்குரியவை என்பது மேல் விளக்கப்பெற்றது. அவை உயர்திணைக்கண் இடுகுறியாய் வழங்கற்பயத்தவாய் வருமென்பதும் ஆண்டு விளக்கப்பட்டது. அங்ஙனம் அஃறிணைக்கு உரிமையுடைய அவ்இயற்பெயர்கள் இடுபெயராய் உயர்திணையுள் இருவகை ஒருமைப்பாற்கும் சென்று விரவுதலின் அப்பெற்றி தோன்ற "ஒருவர் என்னும் அன்றிப் பாற்கும்" என விதந்து சுட்டி எச்ச உம்மை கொடுத்தோதினார் என்க. |
சேனாவரையர் பன்மைசுட்டிய பெயர் பன்மையையேயன்றி ஒருமையையும் சுட்டுதல் பொருந்துமோ? என்னும் தடையை எழுப்பி வடமொழியாளர் கூறும் விசேடண விசேடிய இலக்கணத்தைச் சுட்டி அமைதி கூறுவாராயினர். சங்கர நமச்சிவாயர் முதலானோர் இருதிணைக்கண்ணும் பன்மைசுட்டி வருதலையே இச்சூத்திரம் கூறுவதாக வலிந்து விளக்கங் கொண்டனர். பிற்கால உரை விளக்கத்தாரும் இக்கால ஆய்வாளரும் தத்தமக்குத்தோன்றியவாறெல்லாம் விளக்குவர். |
இவர் யாவரும் தமிழியல் மரபையும் ஆசிரியர் மிக நுட்பமாக அமைத்துச் செல்லும் சூத்திர நடையையும் நன்கு கருதாமல் நன்னூல் முதலிய பின்னூல்களின் தாக்கத்தானும், வடமொழி மரபுகளை அடிப்படையாகக் கொள்வதனானும் இங்ஙனம் போலி உரைகளைப் படைத்தனராவர். என்னை? |
இன்னதிணைக்கு உரியவை என்னும் சிறப்புரிமை பெறாத பொதுப்பெயர்கள் இருதிணை ஐம்பாற்குரிய சிறப்பு வினைகளுள் (சிறுபான்மை சிறப்புப் பெயர்களுள்) ஒன்றனை எய்திமுடியுங்கால் பொதுமை நீங்கி இருதிணைகளுள் ஒன்றனுள் அடங்கும் என்பது விரவுப் பெயர்க்குரிய இலக்கணமாம். அங்ஙனம் அவை தத்தம்மரபின் வினையொடு கூடிநில்லாமல் தனித்துநிற்கும் நிலைமைக்கண் அவை விரவுப் பெயர் எனப்படுகின்றன. ஆதலின் அவை இருதிணைக்கண்ணும் வினைநோக்கி விரவுமாற்றை ஆய்ந்து விளக்குதலே ஈண்டு ஆசிரியர் நோக்கமாகும். |