கிழமைப் பொருளாகக்கருதிக் கொண்டு பன்மைசுட்டிய பெயர் என்பது பன்மைப்பாலையே சுட்டவேண்டும் அல்லது ஏற்க வேண்டும் என எண்ணி இடர்ப்படுதல் மயக்க உணர்வாதலறிக. மற்றும் பன்மைசுட்டிய பெயர் என்றது பன்மைக்குரிய வடிவான் அமைந்த பெயரன்றாம். பன்மைவினையொடு முடியுங்கால் அம்முடிபு நோக்கி நின்ற பெயராகும். சொல்வடிவு பன்மைபற்றி நிற்குமாயின் அஃது இருதிணையுள் ஒன்றனுள் அடங்குதலன்றி விரவும் பெயர் ஆகாது என அறிக. |
தமிழ்நெறியறியாத பவணந்தியார் உரையாசிரியர் வழிநின்று "அவற்றுள் ஒன்றே இருதிணைத் தன்பா லேற்கும்" என்றார் இதன் பிழைபாடுகளை விரிக்கின் பெருகுமென்க. |
சூ. 184 : | ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் |
| ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே |
(29) |
க-து : | ஒருமை விரவுப்பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு கூறுகின்றது. |
|
உரை: ஒருமை சுட்டி வரும் பெயர் மூன்றும் அஃறிணைப் பொருள் ஒன்றற்கும் உயர்திணை ஒருமை இரண்டற்கும் பொருந்திய நிலையினவாம். பெண்மைப் பெயரும் ஆண்மைப் பெயரும் ஒருமையே எனினும் அவை சொல்லளவில் தம் தன்மையுணர நின்று, ஒருமையைச் சுட்டும் நோக்கின்றிப் பெண்மை ஆண்மை என்னும் பொருட்டன்மை காட்டி வரும். ஒருமை சுட்டிய பெயர் சொல்லளவில் பெண்மைத் தன்மையும் ஆண்மைத் தன்மையும் இன்றி ஒருமைப் பாலாகிய நிலையைச் சுட்டிவரும் என்க. |
எ-டு : கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும் செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும் கொடும் புறமருது வளர்ந்தது, கொடும்புறமருது வளர்ந்தான், கொடும்புறமருது வளர்ந்தாள் எனவும் வரும். கோதை இது, கோதை இவன், கோதை இவள் எனவும் வரும். (மருது - மருதமரம்) கொடும்புறமருதி - கொடும்புறமருதன் என்பவை ஈற்றான் பெண்மை ஆண்மைகளை உணர்த்தி நிற்றலின் அவை காட்டாதல் பொருந்தா என்க. |
சூ. 185 : | தாமென் கிளவி பன்மைக் குரித்தே |
[30] |
க-து : | தத்தம்மரபினவாய் வரும் பொதுப் பெயருள் 'தாம்' என்பது இருதிணைக் கண்ணும் வருமாறு கூறுகின்றது. |