சூ. 189 : | நீயிர் நீஎன வரூஉங் கிளவி |
| பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள |
(34) |
க-து : | நீயிர்-நீ என்னும் பொதுப்பெயர்க்கு இலக்கணங் கூறுகின்றது. |
|
உரை:நீயிர் நீ எனவரும் முன்னிலைப் பெயர்கள் (ஏனைப் பொதுப் பெயர்களைப் போல வினையான்) திணை வேறுபாடு தெரிதல் இல (முன்னத்தான் உணரும் முறைமையொடு இருதிணைகளையும் ஒருங்குமொழிதலையுடைய பொருளினவாம்) பால் என்றது ஈண்டுத்திணையினை. |
எ-டு : நீயிர் வந்தீர், நீயிர் வம்மின் எனவும். நீ வந்தாய், நீ வந்தனை, நீ காண்டி எனவும் வரும். தத்தம் மரபினவாக வரும் முன்னிலைவினைகளும் பொது வினையாய் நிற்றலான் 'பால்தெரி பிலவே' எனவும் 'உடன்மொழிப் பொருள' என்றும் கூறினார். இவை திணை புலப்படுத்துமாற்றினை "முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல்" (பெயரியல்-39.) என்பதனாற் கூறுப. |
சூ. 190 : | அவற்றுள் |
| நீயென் கிளவி ஒருமைக் குரித்தே |
(35) |
க-து : | நீயென்னுப்பொதுப்பெயர் பால்காட்டுமாறு கூறுகின்றது. |
|
உரை: மேற்கூறிய முன்னிலைப் பெயர்களுள் நீ என்னும் சொல் (திணைகாட்டாதாயினும்) இருதிணைக்கண்ணும் ஒருமை குறித்து வரும். எ-டு : நீ வந்தாய் என்பது ஒருவன் ஒருத்தியாகிய உயர்திணைக்கும் ஒன்றுபற்றிய அஃறிணைக்கும் உரித்தாய்நின்றவாறு காண்க. |
சூ. 191 : | ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே |
(36) |
க-து : | நீயிர் என்பது இன்னபால் காட்டும் என்கின்றது. |
|
உரை:பிறிதொன்றாகிய நீயிர் என்னும் பொதுப்பெயர் இரு திணைக்கண்ணும் பன்மைக்குரித்தாய் வரும். எ-டு : நீயிர் வந்தீர் என்பது உயர்திணைப் பல்லோர்க்கும், அஃறிணைப் பலவிற்கும் உரித்தாய் வந்தவாறு கண்டு கொள்க. |
முறையிற் கூறாது இதனைப் பிற்கூறியது நீயிர் என்னும் சொல் நும்மின் திரி பெயர் என்பதை நினைவுறுத்தற்கும், இடைக்குறையாய் நீர் என நிற்பினும் கொள்ளற்கும் என்க. |