சூ. 192 : | ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி |
| இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை |
(37) |
க-து : | ஒருவர் என்னும் சொல் பால்விரவுமாறு கூறுகின்றது. |
|
உரை: ஒருவர் என்னும் பெயர்நிலைமைத் தாகிய சொல் ஆராயுமிடத்து ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலுக்கும் உரித்தாய் வரும். எ-டு : ஒருவர் வந்தார் - ஒருவர் அவர், எனவரும். |
இருபாற்கும் எனப் பொதுப்பட நிற்பினும் 'ஒரு' என்னும் முதனிலையாற் பாலுணர்த்துவன ஒருவன் ஒருத்தி என்பனவே ஆதலின் அவையே கொள்ளப்படும். உயர்திணை ஒருமைப்பால் இரண்டேயாதலின் பாற்கும் என்னும் உம்மை முற்றும்மை. ஆடூஉ மகடூஉ என்னும் இருபாற் கண்ணும் விரவுதலின் இதனை விரவுப் பெயரதிகாரத்து வைத்தார் என்க. ஒருவர் (ஒருவுவர்) - நீங்குவர் என்னும் பொருள் தருமிடத்து வினைநிலை எய்துதலின் பெயர்நிலைக்கிளவி என்றார். |
சூ. 193 : | தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும் |
(38) |
க-து : | ஒருவர் என்னும் சொற்கு வினைமுடிபு கூறுமுகத்தான் அதன்கட் கிடப்பதோர் ஐயமகற்றுகின்றது. |
|
உரை:மேற்கூறிய ஒருவர் என்னும் பெயரினது இயல்பினைக் கருதின் அது பன்மைச் சொல்லான் முடிதற்கு ஏற்புடையதாகும். எ-டு : மேற்காட்டப்பட்டது. |
ஏனை விரவுப்பெயர்கள் சுட்டி நிற்கும், பெண்மை, ஆண்மைகட்கு ஏற்ப வினை கொள்ளுமன்றே? அங்ஙனம் இதுவும் கொள்ளுமோ என நின்ற ஐயம் நீங்கப் பன்மைக்கு ஏற்கும் என்றார். |
முதனிலையாகிய பொருளான் ஒருமையாயும் இறுதி இடைச் சொல்லான் பன்மையாயும் நிற்றலின் முடிபு பற்றிய தடுமாற்றம் நீங்கப் பன்மை முடிபு கோடல் மரபென்பது அறிவித்தற்கு "ஏற்கும்" என்றார். |
சூ. 194 : | இன்ன பெயரே இவையெனல் வேண்டின் |
| முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல் |
(39) |
க-து : | மேற்கூறியவற்றுள் நீயிர், நீ என்பவற்றிற்குத் திணையும் ஒருவர் என்பதற்குப் பாலும் அறியும் முறைமை கூறுகின்றது. |