உரை : நீயிர், நீ, ஒருவர் என்பவை இன்னதிணை, இன்ன பால் பற்றி நிற்கும் பெயரே என அறிதல் வேண்டின் செப்புவோனது குறிப்பொடு சேர்த்தி முறையானே உணர்க. முறையாவது வழக்கு. |
எ-டு :நீயுந்தவறிலை (கலி-56) என்பது மகடூஉவாகிய உயர் திணையையும், நீயே பிறர்நாடு கொள்ளுங்காலை (புறம்-57) என்பது ஆடூஉவாகிய உயர்திணையையும், இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ (கலி-129) என்பது அஃறிணை ஒன்றனையும் குறிப்பான் உணர நின்றன. நீ அரசன்-நீதோழி-நீகிள்ளை எனப் பின்வரும் சொற்களான் ஆடூஉ மகடூஉ ஒன்று என்பது உணர நின்றது. பறவை வேட்டுவன் வலையைச் சுருக்குவானாய் நீயிர் அகப்பட்டீர் என்புழி அஃறிணையையும், சொல்வலைவேட்டுவன் நீயிர் அகப்பட்டீர் என்புழி உயர்திணையையும் உணர்த்தி நிற்குமாறறிக. |
ஒருவர் மணந்தார் என்புழி ஒருவனையும்; ஒருவர் வாழ்க்கைப்பட்டார் என்புழி ஒருத்தியையும் உணர்த்தி நிற்குமாறறிக. ஆயிழையார் ஒருவர். அயில்வேலார் ஒருவர் என்புழியும் அவ்வாறே உணர்த்தி நின்றது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. இங்ஙனம் இடமுதலாய சூழல்களான் உணரப்படுதலின் "முன்னஞ் சேர்த்தி" என்றும், "முறையின் உணர்தல்" என்றும் கூறினார். |
சூ. 195 : | மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி |
| மகடூஉ வியற்கை தொழில் வயினான |
[40] |
க-து : | இச்சூத்திரம் முதலாகப் பெயர்ச்சொல்பற்றி ஒழிந்து நின்ற மரபுபற்றிய இலக்கணங் கூறுகின்றார். இச்சூத்திரம் உயர்திணைப் பெயருள் பெண்மையடுத்த மகனென் கிளவி என்பதற்காவதோரியல்பு கூறுகின்றது. |
|
உரை:மகடூஉப் பொருண்மைத்தாகிய தொகைச் சொற்கண் ஒருகூறு திரிந்துநிற்கும் 'பெண் மகன்' என்னும் பெயர், பயனிலை கொள்ளுமிடத்து மகடூஉவிற்குரிய இலக்கணத்ததாகும். |
எ-டு : பெண்மகன் வந்தாள் எனவரும். பெண்மகன் என்னும் தொகைச் சொல் முதனிலைபற்றி மகடூஉ வினை கொள்ளுமோ இறுதிநிலைப்பற்றி ஆடூஉ வினைகொள்ளுமோ என நிகழும் ஐயம் நீங்கிப் பொருண்மைப்பற்றி மகடூஉவின் வினை கொள்ளுதலே இலக்கணம் என்பதுணர "மகடூஉ வியற்கை" என்றார். "சிறப்புப்பற்றித் தொழில் வயினான" என்றாரேனும் பெண்மகன் சிறியள் எனக்குறிப்புவினையினையும், பெண்மகன் இவள் எனப்பெயரினையும் கோடலுமாம். |