உரை: மேலைச்சூத்திரத்துச் செய்யுளுள் இறைச்சிப்பொருள்வயின் கிளக்கும் இயற்பெயர்க்கிளவிகள் உயர்திணையைச் சுட்டா என்றது, ஐந்திணைஒழுக்கத்திற்குரிய தலைமக்களுக்குரியவாகத் திணையொடு தொன்று தொட்டுப் பயின்று வரும் பெயர் அல்லாத விடத்தேயாம்: என்றது, திணையொடு பழகிவரும் இப்பெயர்கள் உயர்திணையைச் சுட்டி (விரவுப்பெயராய்) வரும் என்றவாறு. |
அவையாவன : காளை, மீளி, விடலை என்னும் தொடக்கத்தன. திணை என்றது உரிப்பொருளாகிய ஒழுகலாற்றினை. அஃது ஈண்டு அவ்வொழுகலாற்றினையுடைய மக்கள் மேல்நின்றது. |
எ-டு : "வயக்களிற்றன்ன காளையொடு என்மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ விலனே" (அகம்-55) எனவும் "அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே" (அகம் - 195) எனவும் "எம்மனோரிற் செம்மலும் உடைத்தே" (அகம்-34) எனவும் வரும். இவற்றுள் காளை, விடலை செம்மல் என்னும் விரவுப் பெயர்கள் உயர்திணையைச்சுட்டி நின்றவாறு கண்டுகொள்க. |
இவ்விரண்டு சூத்திரங்களும் விரவுப் பெயர் பற்றிய ஒழிபிலக்கணமாகும். இவற்றின் நோக்கறிந்துரையாது உரையாசிரியன்மார் நெகிழ்ந்து போயினர். இத்தகைய தொன்மரபுகளை ஓர்ந்தறிந்து கொள்க. |
பெயரியல் முற்றியது. |
6. வினையியல் |
வினைச்சொற்கள் பற்றிய இயல்பும் மரபும் உணர்த்துதலின் வினையியல் எனப்பெயர் பெற்றது. இச்சொல் 'விண்' என்னும் அசைவுக் குறிப்புணர்த்தும் உரிச்சொல் உடைமைப் பொருள்படும் ஐகாரத்தோடு கூடி 'விணை' என்றாகி இலக்கணக் குறியீடு கருதித்திரிக்கப்பட்டு 'வினை' என நின்றது. |
வினைச்சொல் என்பது பெயர்ச் சொல்லாற் சுட்டப்பெறும் பொருளின் தொழிலாகிய புறநிகழ்ச்சியையும் தன்மை நிலையாகிய அகநிகழ்ச்சியையும் உணர்த்தும் இலக்கணக்குறியீடாகும். அசைவாகிய புடைபெயர்ச்சி காலத்தொடு தொடர்புடைய |