தாகலின் புடைபெயர்ச்சியை உணர்த்திவரும்சொல் காலத்தைக் காட்டும் உறுப்பினைத் தன்னகத்தே கொண்டு நிகழும். தன்மை நிலை என்பது தன்னானும் பிறிதானும் விளங்கும் நிலைமைத்தாகலின், அந்நிலையை உணர்த்திவரும் சொல் காலங்காட்டும் உறுப்பின்றிக் காலமுணர்த்தும் துணைச் சொல்லை அவாவி அக்குறிப்பானே காலத்தொடு புணர்ந்து நிற்கும். இவற்றுள் முன்னது "காலக்கிளவி" என்றும் "வினை" என்றும் பின்னது "குறிப்பு" என்றும் "குறிப்புவினை" என்றும் இலக்கணநூலாரான் வழங்கப்பெறும். உரையாளர் முறையே தெரிநிலைவினை, குறிப்புவினை எனக்கூறுவர். |
இருதிணைப்பொருள்களை உணர்தற்குக் கருவியாகிய பெயர்ச்சொற்களை ஆக்குதற்கு அடிப்படையான உரிச்சொற்களே வினைச்சொற்களை ஆக்கிக்கோடற்கும் அடிப்படையாகும். |
"இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி" வரும் உரிச்சொற்கள் திணைபால் இடங்காட்டும் இடைச்சொற்களொடு கூடிவரின் பெயர்ச் சொற்களாம். அவற்றொடு காலம் புணர்ந்து நிற்பின் வினைச் சொற்களாம். இவை திணைபால் இடம் காட்டாமல் காலத்தொடு மட்டும் புணர்ந்துநிற்பின் அவை வினைஎஞ்சுகிளவி, பெயரெஞ்சு கிளவி எனப்படும். |
பொருட்பெயர் இடப்பெயர் பண்புப்பெயர் தொழிற்பெயர் என்னும் நான்கனுள் தொழிற்பெயர் முதனிலையாக வரும் வினைச்சொற்கள் காலந்தெற்றெனப் புலப்பட நிற்கும். ஏனைப் பெயர்களின் முதனிலைகளை அடிப்படையாகக் கொண்டு வரும் வினைச்சொற்கள் காலம் குறிப்பாகக் கொள்ளுமாறு நிற்கும். |
பெயர்ச்சொல் முதலிய நால்வகைச் சொற்களின் இலக்கணங்களையும் சொல் வடிவங்களின் துணையான் உணர்த்தல் வேண்டுதலானும் பொருட்பெயர் முதலாய நால்வகைப் பெயர்களின் முதனிலைகளே வினைச்சொற்கட்கு முதனிலைகளாக வருதலானும் விரிவஞ்சி அவற்றை விதந்து கூறாமல் இறுதி இடைச்சொற்கள் வாயிலாகவும், வாய்பாடுகள் வாயிலாகவும் ஒரோவழி அச்சொற்களையே எடுத்தோதியும் சிறுபான்மை பொருளை விதந்தோதியும் ஆசிரியர் வினைச்சொல் பற்றிய இயல்புகளை இவ்வியலுள் விளக்குகின்றார். சில இயல்பு கிளவியாக்கத்துட் பெறப்பட்டன. எஞ்சியவை எச்சவியலுள் பெறப்படும். |