குறிப்புப் பொருண்மைபற்றி வரும் சொற்களாவன : பொருட் பெயரும் இடப்பெயரும் பண்புப்பெயருமாக அமைவனவாகும். [காலப்பெயர் இடப்பெயருள்ளும் சினைப்பெயர் பொருட் பெயருள்ளும் அடங்கும்] தொழிற் பொருண்மைபற்றி வரும் சொற்களாவன, தொழிற்பெயர்களாக அமைவனவாம். சிறுபான்மை ஏற்றபெற்றி இடைச்சொல், உரிச்சொற்களடி யானும் வரும். |
இனி, உயர்திணை வினைச்சொற்கள் இடம்பற்றித் தன்மை வினை, படர்க்கை வினை எனவும், பால்பற்றி ஆடூஉ அறிவினை, மகடூஉ, அறிவினை, பல்லோர் அறிவினை எனவும் தன்மை வினை; தனித்தன்மை வினை, உளப்பாட்டுத் தன்மை வினை எனவும் வகைப்பட்டு அம்முக்காலமும் பற்றி விதிவினையாயும் மறைவினையாயும் விரிந்துவரும். அஃறிணை வினைச் சொற்கள் படர்க்கைக்கே உரியவாய் ஒன்று, பல என்னும் பால் பற்றி விதி வினையாயும் மறை வினையாயும் வரும். ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையவாய் வரும் வினைச்சொற்கள் முன்னிலைவினை முதலாக எண்வகையினவாய் அவ்அவற்றிற்குப் பொருந்திய காலத்தொடு ஒருமையும், பன்மையுமாகிய பாலுணர்த்தி விதி வினையாயும் மறைவினையாயும் வரும். அவை அங்ஙனம் வருதலான் "நெறிப்படத் தோன்றி வரும்" என்றார். |