வினையியல்221

அவைதாம்  என்பது  அதிகாரம்  உணர்த்தும் சொற்சீரடி அது கூனாய்
நின்று இனிவருகின்றவற்றொடு சென்றியையும். (தெய்வச்சிலையார் உரையுள்
இக்கூன் இடம்  பெறவில்லை) தலைதடுமாற்றமாகத் தன்மைப்பன்மை வினை
முற்கூறினார்.  தன்மைவினை உயர்திணைக்கே  உரித்தென்பது அறிவித்தற்
கென்க.
 

உரை :அம்  ஆம்  எம்  ஏம்  என்னும்   ஈற்றிடைச்   சொற்களும்,
உம்மையொடு   கூடிவரும்  கடதற  வாகிய  கும்டும்  தும்றும்   என்னும்
அந்நான்கு ஈற்றிடைச்  சொற்களொடு ஆகிய எட்டுச் சொற்களும் தன்மைப்
பன்மையை உணர்த்தும் உயர்திணை வினைச் சொற்களாம்.
 

ஆய எண்கிளவியும்  என்பது ஆயெண்கிளவி என விகாரமாய் நின்றது.
அம்  ஆம்   முதலியவை   அவற்றை  ஈறாக உடைய வினைச்சொற்களை
ஆகுபெயரான்  உணர்த்தி   நின்றனவாதலின்  ஆயெண்  கிளவி என்பது
எழுவாயாயும் தன்மைச் சொல் என்பது பயனிலையாயும் நின்றன.
 

தன்மையாவது    தனி    ஒருவராகிய   நிலைமைத்தாயினும்   பிறரை
அகப்படுத்தி   நிற்றற்கண்   பன்மையாதற்கொத்தலின்   தன்மைப் பன்மை
என்பது இலக்கணமாயிற்றென்க.  பிறரை  அகப்படுத்துமிடத்துத் தன்னொடு
முன்னிலையாரை   அகப்படுத்தலும்   படர்க்கையாரை,    அகப்படுத்தலும்
அவ்விருவரையும்     ஒருங்கு     அகப்படுத்தலும்    ஆம்.   அவ்வழி
முன்னிலையாரை  அகப்படுத்தற்கண்  "யாம்" எனவும், படர்க்கையாரையும்,
அவ்விருவரையும்   ஒருங்கு   அகப்படுத்தற்கண்  "நாம்"  எனவும்கூறுதல்
மரபாகும். அம் ஆம் என்பவை, யாம்  என்பதனொடும் எம்  ஏம் கும் டும்
தும்  றும்  என்பவை  நாம்  என்பதனொடும் பெரும்பான்மையும் இயைந்து
வரும்.
 

அம்  ஆம்  எம்  ஏம்  என்பவை  மூன்று  காலமும், கும்டும் தும்றும்
என்பவை  எதிர்காலமும்  பற்றி  வருதலான்  பிரித்தோதினார். அவற்றுள்
கும்ஈறு   வினை   கொண்டு  முடிதற்கும்  ஏற்றலானும்,  தடற  என்பவை
காலமுணர்த்தும்    உறுப்பாகாமல்   ஈற்றிடைச்   சொற்குத்   துணையாய்
நிற்றலானும்  அவற்றை  'உம்'  ஈறு  என  ஒன்றாகக்  கூறாமல் "அந்நாற்
கிளவியும்" என வகுத்தோதினார்.
 

இனி,  அவை  கால  இடைச்  சொற்களொடு  இயையுங்கால் அம் எம்
என்பவை   அன்   என்னும்  சாரியை   பெற்றும் ஆம் என்பது சாரியை
பெறாதும் ஏம் என்பது பெற்றும் பெறாதும் வரும்.