சூ. 423:பாம்பு, பாம்பு, என்பது விரைவு பற்றிய அடுக்குக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அஃது அச்சம் பற்றியதற்கு எடுத்துக் காட்டாதல் மிகுதியும் பொருந்தும் (பக்-385) |
சூ. 449:"பூணற்குப் பொன்னாடை கொடு" என்பது தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின் தன்னிடத்தியலுமாறு புலப்படவில்லை (பக்-405) |
சூ. 460:"முன்னத்தின் உணரும்" என்ற நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் குறிப்பிடும் உரைவிளக்கம் உத்தியின் பாற்படும் என்கிறார். எவ்வுத்தியின் எவ்வாறு அடங்கும் என்று விளக்கியிருப்பின் பெரிதும் பயன்தரும். இன்னோரன்ன இன்னும் பலவுள.43 |
சுருங்கச் சொல்லின் எழுத்துப்படல உரையை ஒப்பவே எழுவகை மதமும் அமையப் பாலசுந்தரனார் இச் சொற்படல ஆராய்ச்சிக் காண்டிகையுரையினையும் வரைந்துள்ளார். ஏனையோர் உரைகளிற் காணப்பெறாமல் இவ்வுரையுள் காணப்பெறும் தேவையான அரிய செய்திகள் பல. வேற்றுமைகள் பற்றி இவர் குறிப்பிடுவன நம் உள்ளத்திற்கு இயையவில்லை எனின் அவற்றை இவருடைய மதம் என்று விடுத்துவிடலாம். |
பாலசுந்தரனாரின் பெரும்புலமையை வியக்கும் மாணாக்கர் பலராகவும் நயந்து உடனிருந்து பயன் கொள்வார் அரியராயினாராகையின் அவர் தாமே பிறர் உதவியின்றி எழுதியும் அச்சுப் பிழை திருத்தியும் பதிப்பித்துள்ள இந்நூலில் சில இடங்களில் ஐயம் அகற்றப்படாமலும் அச்சுப்பிழைகள் திருத்தப்படாமலும் இருப்பதைக் காண்கிறோம். |
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். |
திரு. வே. கோபாலையார், |
|
43. எடுத்துக்காட்டுக்கூறி இவை அங்ஙனம் கேட்போர் தகவுகளைப் புலப்படுத்து நிற்கும் என்றதனான் அதுதன்மையிடத்தை உணர்த்தும் எனக்கருதி விரிக்கப்படவில்லை. |
இதுகாறும் பயிலும் மாணாக்கரை உளத்திற்கொண்டு ஐயரவர்கள் சுட்டியுள்ள ஐயம் முதலியற்றிற்குரிய இன்றியமையாத விளக்கமும் திருத்தமும் அடுத்தபதிப்பிற் சேர்க்கப்படும். |