நன்றியுரை
 

ஒருமொழியினது   தனித்தன்மையையும்   சிறப்பியல்புகளையும்  நன்கு
தெரிவிப்பவை     அம்மொழியின்     சொல்,      சொற்றொடரமைப்புக்
கோட்பாடுகளேயாகும்.   அவற்றுள்  பெயர்ப்பொருளின்  இயக்கங்களையும்
இயல்புகளையும்  காட்டும்  வினைச்சொல்லிலக்கணமும்  அவ்வினைகளான்
பெயர்ப்பொருள்      அடையும்       மாற்றங்களை        உணர்த்தும்
வேற்றுமையிலக்கணமும் தலையாயவையாகும்.
 

சமற்கிருதமொழியும்    தமிழ்மொழியும்   வினையியற்   கோட்பாட்டில்
பெரிதும்         வேறுபட்டவை         என்பதை        உணர்வோர்
வேற்றுமைக்கோட்பாட்டினை        ஒற்றுமையுடையதாகக்      கருதுவது
இரங்கத்தக்கதொன்றாகும்.     அது      காரணமாகவே    தொல்காப்பிய
வேற்றுமையியல்   நூற்பாக்களுக்கு   உண்மையான  பொருள்  காணாமல்
உரையாசிரியன்மார் உட்பட யாவரும் பிறழ்ந்து போவாராயினர்.
 

தொல்காப்பியச்  சூத்திரங்களின்  அமைப்பினை   ஊன்றி   நோக்கின்
தொல்காப்பியர்   தம்   நூலைச்   செய்த    காலத்தில்   தமிழிலக்கணக்
கோட்பாடுகளைக்  கூறும்  நூல்கள் பல்கியிருந்திருத்தல்  வேண்டுமென்பது
புலனாகும். அவை பழந்தமிழ் (பிராகிருதம்) பற்றியவையாயும் செய்யுள்தமிழ்
(செந்தமிழ்)   பற்றியவையாயும்   அமைந்திருத்தல்   வேண்டும். அவற்றை
ஆராய்ந்து     முறைப்படத்     தொகுத்த    அரியசெயல்     மட்டுமே
தொல்காப்பியர்க்கு உரியது.
 

பாரதப்  பொதுமொழியாகப் படைக்கப்பட்ட சமற்கிருதத்திற்கு அமைந்த
இலக்கணக் கோட்பாடுகள்  மேற்கூறிய  இருவகைத்  தமிழிலும்  அமைந்த
கொள்கைகளை  அடிப்படையாகக்  கொண்டு  முறையாகவும்  விரிவாகவும்
அமைந்ததாதல் வேண்டும்.  பாணினிமுனிவர் இயற்றிய அட்டாத்தியாயியில்
சொல்லிலக்கணமும்  எழுத்திலக்கணமும் பிறவும் கலந்து அமைந்துள்ளமை
இவ்வுண்மையைப்   புலப்படுத்தும்.   சில   ஒற்றுமைக்  கூறுகள்  தவிரப்
பெரும்பான்மையான   கொள்கைகள்   செந்தமிழுக்கே    உரியவையாகும்.
அந்நோக்குப்பட  அறிவியல்  அடிப்படையில்  ஆராய்ந்து எழுதப்பட்டதே
இவ்ஆராய்ச்சிக்    காண்டிகையுரை.   விரிவான   ஆராய்ச்சி   தமிழியற்
கோட்பாட்டு நூலில் அமையும்.