க-து : | முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கைப் பொருளேயன்றி ஒருசார் தொழிற் பண்புணர்த்தும் சொற்களும் செய்யு மென்னும் முற்றினை ஏற்று வரும் என்கின்றது. |
|
பொருள் :ஒன்றன்கண் சிறப்புடைத்தாக நிகழும் பாங்கினையுடைய வினைச்சொல்லை நோக்கிச் செயல் குறியாமல் அச்செயற் பண்பினைக் குறித்து நிற்கும் வினை முதலாகிய சொல், செய்யும் பிற கருத்தா இல்லாத இடத்து நிகழ்காலத்திற்குரிய செய்யுமென்னும் சொல்லொடு தோன்றி வரும். |
அஃதாவது : ஈதல், ஓதல், கற்றல், ஆற்றுதல், ஒழுகுதல் முதலிய தொழிற் சொற்கள் வினை நிகழ்வை உணர்த்தாமல் ஈகை முதலிய பண்புகளை உணர்த்தி வருங்கால் அவை ஒரு கருத்தாவைப்பற்றி வாராமல் தாமே எழுவாயாக நின்று பயனிலை கோடற்கண் செய்யுமென்னும் முற்றினை ஏற்றுவரும் என்பதாம். |
"நிகழும் காலத்து மெய்" என்றது செய்யும் என்னும் முற்றுச் சொல்லை, அதனை "நிகழுங்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல்" (சூ. 241) என மேற் கிளந்தமையான் ஈண்டு "நிகழுங் காலத்து மெய்" எனச் சுட்டிக் கூறினார். |
எ-டு: "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்" என்புழி, ஒழுக்கம் என்னும் பண்பு குறித்து நிற்கும் ஒழுகுதல் என்னும் வினைச்சொல் எழுவாயாக நின்று, தரும் என்னும் முற்று வினையை ஏற்று முக்காலத்திற்கும் ஒப்ப நின்றவாறு காண்க. ஈதல் இசைபரப்பும் - கற்றல் அறிவு நல்கும் - ஆற்றல் இன்பந்தரும் என்றாங்கு வருவனவும் அன்ன. |
இன்ன செயல் என எடுத்துக் கூறுதற்கண் என்பார் "மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி" என்றும், அவ்வினைச் சொற்கள் வினை உணர்த்தும் வழி 'ஈதல் இசை பரப்பிற்று' என ஏனைமுற்றுச் சொல்லானும் முடியுமாகலின் "அப்பண்பு குறித்த" என்றும், வினைமுடிபு கொள்ளுதல் அதுவேயாதலின் "வினைமுதற் கிளவி" என்றும், செய்வதாகிய கருத்தாவொடுவரின் தீயொழுக்கத்தான் கெட்டான்--கெடுவான் எனப் பிற வினைச் சொற்களானும் முடியுமாதலின் 'செய்வதில் வழி' என்றும், கருத்து வகையான் அம்முடிபுச்சொல்எதிர்காலத்திற் குரித்தாகலின் "நிகழுங்காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே" என்றும் கூறினார். அன்பு, இன்பு வாய்மை, தூய்மை முதலாய பண்புச் சொற்களை நீக்குதற்கு "வினைச் சொற் சுட்டி அப்பண்பு குறித்த கிளவி" என்றார். |