ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு வேற்றுமொழித் தாக்கத்தால் தன் தன்மையில் மாறுபாடு யாதும் நிகழ்தற்கு வாய்ப்பின்றித் தனக்கே உரிய தனித்தன்மையுடன் தமிழ்மொழி வழங்கிய காலத்து அதன் இலக்கணக் கோட்பாடுகளின் தனித் தன்மையை மனங்கொண்டு அதற்கு எழுத்து, சொல், பொருள் என்ற முப்படலப் பகுப்பொடு தொல்காப்பியனாரால் இயற்றப் பெற்ற இயற்றமிழ் இலக்கண நூலுக்கு அவர்காலத்து உரைவரையும் தேவை இலதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழிந்த பின்றை, "பாரததேயத்துப் பயிலும் மொழிகள் எல்லாவற்றினுக்கும் தாய் சமற்கிருத மொழியே" என்ற எண்ணம் தமிழ் வடமொழி இரண்டனையும் புரைதபக்கற்றார் மாட்டும் உறுதிப்பட்ட அக்காலத்துத் தாம் தமிழ்மொழிக்கும் உரியனவாக உளங்கொண்ட மொழியியல் கோட்பாடுகளைத் தம் உரைகளின் இடைமிடைந்து கற்றுவல்ல சான்றோர் நால்வருக்கும் மேற்பட்டவர் தொல்காப்பியச் சொற்படலத்துக்கு வரைந்துள்ள உரைகள் இன்று நமக்குக் கிட்டுவனவாக, அவற்றிடை ஒப்பன ஒவ்வாதனவற்றை இக்காலத்து வளர்ந்து வரும் மொழியியற் கோட்பாடுகளில் தோய்ந்து உண்மை கண்டதம் நுண்ணறிவான் ஆய்ந்து நல்லனபலவற்றை ஏற்றும் அல்லனவற்றைத் தமிழியலுக்கு ஏற்பக் காரணங்காட்டி மாற்றியும் தொல்காப்பியச் சொற்படல நூற்பாக்களுக்குப் பெரும்பாலும் ஆசிரியர் கருத்தொடு பொருந்துவனவாகத் தாம் கண்ட பலவற்றையும் சுருக்கமாக முன்னுரையிலும் நூற்பாக்கள் உரையிலும் சுட்டி அவற்றின் விரிவை இனித்தாம் வரையவிருக்கும் தனிக்கட்டுரைகளில் "உரைத்தும்" என்றும் தெரிவித்து இயற்றமிழ்ப் பெரும் புலவர் பாலசுந்தரனார் வரைந்துள்ள தொல்காப்பியச் சொற்படல ஆராய்ச்சிக் காண்டிகையுரையினை, விரைந்து நோக்கி நலங்கண்டு மகிழாத வகையில் என் மூப்பிற்கு உற்ற நட்பாய் அமைந்த நெடுநீரும் மடியும் இருபாலும் நின்று தகைக்க மறவி அவற்றுக்கு உற்ற துணையாக உதவ ஆகூழின் ஆற்றலான் அவற்றை ஒருபால் மீதூராவாறு தகைத்து நூல் முழுதும் ஒருமுறை நோக்கிப்பல இடங்களில் நயந்தும் சில இடங்களில் வியந்தும் யான்பெற்ற இன்பத்தை 'நல்லோர் |