இளம்பூரணர் முதலாய உரையாசிரியன்மார் தம் உரைகளையும் நன்னூல்
முதலாய   சின்னூல்களையும்  ஏறத்தாழ  1200  ஆண்டுகளாகப்  பயின்று
அக்கருத்துக்களிலே  படிந்துவிட்ட  நெஞ்சங்கள் இப்புத்துரையை எளிதாக
ஏற்றுக்   கொள்ளும்  என்று  கூற இயலாது.  எனினும் ஆராய்ச்சி உலகில்
இஃது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின் அதுவே பெரியதொரு பயனாகும்.
 

பேராசிரியர்  முனைவர் ச. அகத்தியலிங்கனார் சுட்டியுள்ளமை போன்று
மரபிலக்கணப்  பயிற்சியும்  ஆராய்ச்சியும்  மேலும்   தேய்ந்து   விடாமல்
இவ்வுரை  புத்தெழுச்சி  கொள்ளத்  தூண்டுமாயின்   அதுவே   எனக்குப்
பேறாகும்.
 

எழுத்ததிகாரஉரைக்கு    வழங்கியது    போன்றே   இச்சொல்லதிகார
உரைக்கும்    அணிந்துரை    தந்துள்ள     பேராசிரியர்     முனைவர்
ச. அகத்தியலிங்கனார்    அவர்கட்கும்     வாழ்த்துரை     வழங்கியுள்ள
தவத்திருகாத்தையா    சுவாமிகள்   அவர்கட்கும்    சால்பக   நிறுவனர்
திரு. யு. சுப்பிரமணியனார்  அவர்கட்கும்  இவ்வுரை  வெளிவரப் பேருதவி
புரிந்து  வரும்  முனைவர்  சிலம்பொலி  சு. செல்லப்பனார்  அவர்கட்கும்
(இவர்  தம்  சிறப்புக்களை  எழுத்ததிகார  நன்றியுரையுள்  கூறியுள்ளேன்)
எழுத்ததிகாரத்திற்கு வரைந்தாங்கு இதற்கும் அரியதோர் ஆய்வு முன்னுரை
வழங்கியுள்ள   திரு வே. கோபாலையர்  அவர்கட்கும் இதன் முற்பகுதியை
அச்சிட்டு    உதவியுள்ள     நண்பர்     அ.கி.மூர்த்தி     அவர்கட்கும்
பிற்பகுதியையும்    அட்டை    முதலாயவற்றையும்    அச்சிட்டருளியுள்ள
திரு. பூ. நா. இராமச்சந்திரனார் அவர்கட்கும் எனது உளமார்ந்த
நன்றியுரியதாகும்.
 

என்னுடைய  பணிக்குத் தோன்றாத்  துணையாக இருந்து அருள்புரியும்
பரம்பொருளை வந்தித்து வணங்குகிறேன்.
 

குறிப்பு:-
 

இந்நூற்குப்  பொதுவான  முன்னுரை எழுத்ததிகாரத்துள் கூறியுள்ளேன்.
நூல் முழுமைக்கும் உரிய உரை வரலாறு பின்னர் வரும்.
 

அன்புள்ள  
ச. பாலசுந்தரம்