வினையியல்271

முதல்.   'செயல்'     என்பது    'வேண்டு'   மென்னும்  பயனிலைக்குச்
செயப்படுபொருட்பயத்தவாய்     நிற்கும்       தொழில்,    இம்மூன்றும்
வாய்பாடுகளேயாம்.    இது   என்பது   வாய்பாடாதலை  இதனினிற்றிது -
இதனதிதுஎன  வருவனவற்றான்  அறிக.  வேண்டும்   என்பதும்  செய்யும்
என்னும்  வாய்பாடே   ஆயினும்,  செய்யும்  என்னும்  வாய்பாடு  எல்லா
வினையின் கண்ணும் வருமாதலின்  அதனை  நீக்கித்  தொழிற் பெயரொடு
வருதற்கேற்ற ஒருசார் வினைகளைச் சுட்டியுணர்தற்கு "வேண்டும்" என்னும்
வாய்பாட்டாற் கூறினார் என்க.
 

எ-டு : சாத்தன் ஓதல் வேண்டும், மயில்  ஆடல்  நோக்கும்,  மன்னன்
வேறல் கருதும் என்றாங்கு வரும்.
 

சாத்தன்  தான்  ஓதலை விரும்பும் எனவும் சாத்தன் ஓதலை ஆசிரியன்
விரும்பும்  எனவும்,  மயில்தான்  ஆடலை  நோக்கும் (எண்ணும்) எனவும்
மயில் ஆடலை மந்தி நோக்கும் எனவும் மன்னன் தான்  வேறலைக்கருதும்
எனவும்  மன்னன்  வெல்லுதலைப்படைகள்  கருதும்  எனவும்,  வேண்டும்
என்னும்  வாய்பாட்டுச்    சொல்   இருவயின்   நிலையும்  பொருட்டாய்
நிற்றலைக்கண்டு கொள்க.
 

இதனைச் "செய்யும்" என்னும் வாய்பாடுபற்றிய விதி கூறும் அதிகாரத்து,
"மிக்கதன் மருங்கின்" என்னும்  சூத்திரத்துப்பின்வைத்தமை  யான் இதுவே
இச்சூத்திரத்தின்   கருத்தாதல்   அறியலாம்.  உரையாசிரியன்மார்  கூறும்
கருத்தே  இச்சூத்திரக்கருத்தாயின்  இதனைக்கிளவியாக்கத்துட்  கூறுதலன்றி
ஈண்டுக்கூறார்  ஆசிரியர்   என்க.   செயல்வேண்டும்   வரல்  வேண்டும்
என்பவற்றைச் செய்யவேண்டும் வரவேண்டும்  என  வழங்குதல்  பிழைபட
மருவி வந்த வழக்கென அறிக.
 

சூ. 245 :

வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்

எதர்மறுத் துணர்த்தற் குரிமையும் உடைத்தே 
 
(47)
 
 

க-து :

வினாவொடு   வரும்     வினைச்சொல்     பற்றியதோரியல்பு
கூறுகின்றது.
 

உரை:ஒன்றினை  வற்புறுத்துதற்  பொருட்டு  வினாவொடு கூடிவரும்
வினைச்சொல் எதிர் மறுத்துணர்த்தற்கும் உரிமையுடைத்தாகும்.
 

வரலாறு: ஒருவன்   தன்     மகனை    அச்சுறுத்துதற்   பொருட்டு
ஒறுப்பானாய் இனி இதனைச் செய்வாயா? இதனை எடுப்பாயா?