என்னுமிடத்து அவ்வினாவொடு கூடிய வினைச் சொற்கள் இனிச் செய்யாதே, எடுக்காதே என்னும் எதிர்மறைப் பொருள்பற்றி நிற்குமாறும், ஒருவன் பலருக்கு வரிசையோ பொருளோ நல்குமிடத்துப் பெறாதான் ஒருவன் எனக்கு ஈக என்று இரப்புழி அளிப்போன் நீ பெற்றாய் என, அவன் பெற்றேனே? பெற்றேனே? என்னும் ஆண்டவ் வினாவுடை வினைச்சொல் பெற்றிலேன் என்னும் பொருள்பற்றி நிற்குமாறும் காண்க. |
ஓகாரவினா எதிர்மறைப் பொருள் பற்றி வருதல் இடைச்சொல் லோத்தினுள் பெறப்படுமாகலின் அஃதொழிந்த ஏனை ஆகார ஏகார வினாக்களையே ஈண்டுக் கொள்க. |
சூ. 246 : | வாராக் காலத்து வினைச்சொற் கிளவி |
| இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் |
| இயற்கையும் தெளிவும் கிளக்குங் காலை |
|
(48) |
க-து : | ஒருசார் பொருள்பற்றி வினைச் சொற்கள் காலம் மயங்குமாறு கூறுகின்றது. |
|
உரை: எதிர்காலத்துக்குரிய வினைச்சொற் பொருண்மை இயற்கை பற்றியும் தெளிவு பற்றியும் கிளந்து கூறுமிடத்து இறந்த காலத்தொடும் நிகழ்காலத்தொடும் விளங்கத் தோன்றி வரும். |
இயற்கை (இயலுகை) என்றது பெரும்பான்மையும் வேறுபடாது நிகழும் வழக்காறு பற்றி வருவது. தெளிவு என்பது காட்சி அளவையானும், நூலளவையானும் கொள்ளுதற்கண் மாறுபடாது நிகழ்ந்து வருவது. |
எ-டு :இக்காட்டுள் போகின் கூறை கோட்பட்டான்-கூறை கோட்படும் எனவும் எறும்பு முட்டை கொண்டுதிட்டையேறின் மழை பெய்யும் எனவும் வருதல் இயற்கை. |
ஒருவன் நஞ்சுண்ணின் இறந்தான்-இறக்கும் எனவும், களவு செய்யின் கையறுப்புண்டான் - அறுப்புறும் எனவும் வருதல் தெளிவாம். எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்தது என்பதனைத் தெளிவுக்கு உதாரணமாகக் காட்டுவர். அஃது ஒரோவழி நிகழாமையின் இயற்கையெனலே நேரிதாம். |
இச்சூத்திரம் இறந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலத்தொடு மயங்குமாறு கூறியதாம். |