வினையியல்273

சூ. 247 :

செயப்படு பொருளைச் செய்தது போலத்

தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே

(49)
 

க-து :

வழக்கின்கண்  வினைச்சொல்    பற்றி   நிகழ்வதொரு   மரபு
கூறுகின்றது.
 

உரை : செயப்படுபொருள் வினையாகக் கிளத்தலை வினைமுதல் வினை
போலத்   தொழிற்படச்   சொல்லுதலும்   பரவை   வழக்கின்கண் நிகழும்
மரபாகும். உம்மையான் அங்ஙனம் கிளவாமை பெரும்பான்மை என்பதாம்.
 

எ-டு: திண்ணை  மெழுகிற்று - சோறு       அட்டது     எனவரும்.
மெழுகப்பட்டது  - அடப்பட்டது  எனச்  செயப்படுபொருள் வாய்பாட்டாற்
கூறாமல் வினைமுதல், வாய்பாட்டாற் கூறப்பட்டவாறு காண்க.
 

இனி,  மரம்  வெட்டியது   என்றாற்   போலவன்றி   மரம்  வீழ்ந்தது
எனவரின்   அது   செயப்படு   பொருளுக்குரித்தாகாமையின்   செயப்படு
பொருள்   எனற்கு    ஏற்ற    தொழிலாற்    கிளக்க  வேண்டுமென்பார்
தொழிற்படக் கிளத்தலும் என்றார்.
 

"வழக்கியன்  மரபே"    என்றதனான்,     இவ்வாள்     வெட்டிற்று,
இவ்எழுத்தாணி  எழுதியது   எனக்    கருவியைச்    செய்தது   போலக்
கிளத்தலும் கொள்க.
 

"வன்புற வரூஉம்" என்னும்  சூத்திரமும்  இச்சூத்திரமும்  எச்சவியலுள்
இருத்தல் வேண்டும்.
 

சூ. 248 :

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்

சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி 

 
(49)
 

க-து :

இறந்தகாலச்  சொல்லும்   எதிர்காலச்  சொல்லும்  மயங்குமாறு
கூறுகின்றது.
 

உரை:இறப்பும்    எதிர்வுமாகிய      காலமுணர்த்தும்    அவ்விரு
சொற்களும் மயங்குமொழிப் பொருளவாய்ச் சிறப்பத் தோன்றி வரும்.
 

இம்மயக்கம்   காலப்பெயரும்     வினைச்   சொல்லுமாய்  வருதலின்
"மயங்குமொழிக்    கிளவி"     என்றார்.    [காலப்பெயர் :  நெருநல் -
நாளை முதலியவை]
 

எ-டு : இவர் பண்டுஇப் பொழிலகத்து  விளையாடுவார் எனவும்,நாளை
அவன் வெகுண்டு வாளொடு வந்தான் நீ என் செய்குவை? எனவும் வரும்.