278இடையியல்

வினைச்சொற்கள்   ஒருமொழிப்புணர்ச்சியாகலின்   அவற்றை  நிறுத்த
சொல்லும் குறித்துவரு கிளவியுமாக  வைத்துப்  புணர்த்தற்கு இயலாமையின்
கால இடைநிலைகளை  அம்மாம்  முதலிய  பால்காட்டும்  இறுதி  இடைச்
சொற்களொடு உடனாக வைத்தும்,  உம்-மன  முதலியவற்றை  ஈற்றின்கண்
வைத்தும் உணருமாறு ஓதினார். அதனான் காலமுணர்த்தும் எழுத்துக்களும்
அசைகளும்  இடைச்சொற்களே   என   உணரவைத்தார்.  இறுதி  இடைச்
சொற்கள்    வினையியலுள்    ஓதப்பெற்றன.     குறிப்புவினை     கால
இடைநிலையொடு வாராமையின், வினை மருங்கின் என்னாது "வினைசெயல்
மருங்கின்" என்றார். காலம்  காட்டும்  இவ்இடைச்  சொற்கள்  சொல்லின்
இடையினும் ஈற்றினும் ஏற்றபெற்றியாய் வருமென்க.
 

எ-டு : உண்டனன், உண்டான்,  உண்ணாநின்றனன், உண்ணாநின்றான்,
உண்பான்  எனவரும்.  இவற்றுள் அன்,  ஆன்   என்பவை  பால்காட்டும்
இறுதியிடைச் சொற்கள். ட்,  ஆநின்று,  ப்  என்பவை  காலக்குறிப்பிடைச்
சொற்கள்.
 

காலமொடு    வருநவும்         எனப்     பொதுப்படக்கூறியதனான்
உண்ணா-உண்ணான்.  எனவரும் 'ஆ' கார எதிர் மறையும், வாழ்க, வாழிய
எனவரும்  வியங்கோளீறுகளும்,   'செய்யும்'   என்னும்  உம்  ஈறும், மன
என்னும் முற்றீறும், ஒருசார் வினையெச்ச ஈறுகளும் பிறவும் கொள்க.
 

3) வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்:- ஐ ஒடு கு  இன் அது
கண்  என்பவை  பெயர்ப்  பொருள்   வேறுபாடுற்றமையை   உணர்த்தும்
உருபிடைச்  சொற்களாம்.  உருபும்  என்னாது  'ஆகுநவும்'  என்றதனான்
இன்னும்  ஆனுமாகிய   மாற்றுருபுகளும்  மாறு-உளி,  உடைய  எனவரும்
சொல்லுருபுகளும்   கொள்ளப்படும்.   எ-டு :  வேற்றுமையியல்  உரையுள்
கண்டு கொள்க.
 

4) அசைநிலைக்கிளவி:  என்பது  பிற  பொருளுணர்த்தாமல்  செய்யுள்
வழக்குப் பற்றிச் சீர்க்கு உறுப்பாகவும் சீராகவும் ஓசை  நிரப்புதற்கு  வரும்
சொல்லுறுப்புக்களை.  இதனை   "இசைதிரிந்   திசைப்பினும்   இயையுமன்
பொருளே   அசைதிரிந்   திசையா  என்மனார்  புலவர்"  (பொருளியல்-1)
என்பதனானும் அறிக. செய்யுள் அமைப்பு  நோக்கிப்  புலவரான்  ஆக்கிக்
கொள்ள படுதல் தோன்ற  "ஆகிவருநவும்"  என்றார். அசையாகித் துணை
புரிதலே இதன் பொருளாகும், இசைநிறைக் கிளவிக்கும் இஃதொக்கும்.