தொல்காப்பியம் சொல்லிலக்கணக் கோட்பாடுகள் |
________ |
மன்பதையுள் குரல் ஒலியை மொழியாக்கிப் பேசுந்திறன் மக்களினத்திற்கே வாய்த்ததொரு பெரும்பேறாகும். மொழி, மக்களாற் படைக்கப்பெற்று அவர்களான் ஆக்கமுற்று வளர்ந்து அவர்கட்கு அறிவாகவும் அறிவுத்துணையாகவும் அமைந்து விளங்கும் ஒப்புயர்வற்றதோர் அருவப் பொருளாகும். அதற்கு உருவும் வடிவும் கற்பித்து எதிர்காலத்திற்குப் பயன்படச் செய்பவரும் மக்களேயாவர். |
அம்மக்கள்தம் காமவெகுளி மயக்கங்களான் காலந்தொறும் மொழிநிலை திரிபுற்றுச் சிதையா வண்ணம் தொல்லோர் வகுத்த இலக்கண மரபுகளை அறிவியல் அடிப்படையில் சுருக்கமாக உணர்த்துவது தொல்காப்பியச் சொல்லதிகாரக் கோட்பாடுகளாகும். |
மொழியின் தோற்றம்: |
காட்சிக்குங் கருத்திற்கும் உரிய பொருளுணர்வு ஐம்புல வாயிலாக உயிர்கட்கு எய்துதலான் ஐம்பொறிகள் உள்ள உயிர்கட்கெல்லாம் பொருளுணர்ச்சி இயற்கையேயாம். அவ்வுணர்வுகளை உடலுறுப்பு அசைவுகளானும், குறிப்பொலிகளானுமன்றி ஓசை ஒலிகளை மொழியாக்கி உணர்த்தும் அறிவையும் அதற்கேற்ற வாயமைப்பினையும் பெற்றுள்ளது மக்களுயிர் மட்டுமேயாகும். அவ்வறிவு ஐம்பொறிகளுக்கும் அப்பால் அவற்றொடு தொடர்புடையதொரு புலனுக்குரியதாகும். தத்துவநூலார் அதனை உட்கருவி (அந்தக்கரணம்) என்பர். ஆறாவது அறிவு எனத் தொல்காப்பியம் கூறும். அதற்குப் பெயர்க்குறியீடு மனம் அல்லது உள்ளம் என்பதாகும். |
மனவுணர்வை வேறு சில உயிரினங்களும் சிறுபான்மை உடையன. எனினும் அவற்றிற்கு அவ்வறிவு தம் உணர்வுகளை வாயாற்பேசி வெளிப்படுத்தும் ஆற்றலொடு கூடியமையாமையான் |
"மக்கள் தாமே ஆறறிஉயிரே"என்றும் |
"பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"என்றும் |
|
தொல்காப்பியம் விளம்புகின்றது. |
அதனான் உலகப் பொருள்களுள் மொழியொடு தொடர்புடையதாய் அம்மொழியானே நாளும் நாளும் உயர்ந்து வருவதாகிய மக்களினத்தை உயர்திணை என்றும் அங்ஙனம் உயர்தற்கு வாயாத |