வற்றை அஃறிணை என்றும் இரு கூறாகப் பிரித்து அவ்வடிப்படையிற் சொல்லிலக்கணத்தை வகுத்தமைத்துள்ளனர் தமிழ்நூலார். |
மக்கள் இருதிணைப் பொருளையும் உணர்ந்து அப்பொருளைப் பிறர்க்குணர்த்தும் ஒலிக்குறியீடுகளாகிய சொல்லை அப்பொருளை இடமாகக்கொண்டு படைத்துப் பின்னர் அச் சொற்கள் கருவியாகப் பொருளை உணர்த்துகின்றனர். |
இதனை, |
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே |
(சொல்-1) |
எனச் சுட்டுகின்றது தொல்காப்பியம். |
ஒருவன் ஒரு பொருளைப்பற்றிக் குறியீடு செய்யுங்கால் அக்குறியீட்டைச்செய்வதற்கு அவனிடத்து அப்பொருள் தோற்றுவிக்கும் உணர்வுகளே காரணமாம். அவ்வுணர்வு ஐம்புலங்களின் வாயிலாகவும் ஆறாவதறிவாகிய மனத்தின் வாயிலாகவும் நிகழும். மனக்குறிப்பிற்குப் பெரிதும் துணைபுரிவன செவியும் விழியுமாகும். ஆதலின் அடிப்படைச் சொற்கள் (குறை உரிச்சொற்கள்) இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி (உரி-1) ஆக்கமுறும் என்கின்றது தொல்காப்பியம். |
சொல்லமைப்பும் பாகுபாடுகளும்: |
அங்ஙனம் ஆக்கமுற்று ஒன்றும் பலவுமாக அமைந்து உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் சொற்களை ஆராயின் அவை இருதிணைப் பொருளையும் அவற்றின் தன்மை இயல்புகளையும் செயல்களையும் தெரிவிப்பனவாக அமைந்திருக்கும். |
அவற்றுள் பொருளைத் தெரிவிக்கும் சொற்கள் பெயர்ச்சொல் என்றும், செயலைத் தெரிவிக்கும் சொற்கள் வினைச்சொல் என்றும் தமிழ் நூலார் குறியீடு செய்துள்ளனார். தன்மை இயல்புகளை உணர்த்தும் சொற்கள் பெயராயும் வினையாயும் இரண்டற்கும் பொதுவாயும் நிற்கும். அதனாற் சொற்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகுத்தனர் நூலோர். இதனைச், |
"சொல்லெனப் படுவ பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே" |
|
(சொல்-4) |
எனத் தொல்காப்பியம் புலப்படுத்துகிறது. |