296இடையியல்

உரை:சொல்லிறுதிக்கண்  நின்று  அசையாக  இசைக்கும் ஏ என்னும்
ஈற்றசை,    வழக்கின்கண்    ஒருமாத்திரையளவிற்றாதலும்   உரித்தாகும்.
உம்மையான் ஈரளவிசைத்தலே பெரும்பான்மை என்பதாம்.
 

வரலாறு: முன்னின்றாரை   நோக்கி      ஒருவர்   உரையாடுங்கால்,
கண்டேனே,  பார்த்தேனே,   உண்டேனே   என்ற   வழிக்  கண்டேனெ,
பார்த்தேனெ,   உண்டேனெ      என     இறுதிகுன்றி     இசைத்தலை
வழக்காற்றினானறிக.
 

'கூற்றுவயின்'  என  ஆசிரியர்   விதந்து கூறுதலின் இஃது உரைநடை
வழக்கிற்கே என்பது போதரும்.
 

சூ. 288 :

உம்மை எண்ணும் எனவென் எண்ணும் 

தம்வயின் தொகுதி கடப்பா டிலவே

(39)
 

க-து:

எண்ணிடைச்    சொற்களுள்     இரண்டற்கு  ஆவதொருமரபு
கூறுகின்றது.
 

உரை:உம்மையான் வரும் எண்ணும்,  என  என்று  வரும் எண்ணும்
முடிபின்கண்  தொகை  பெற்றுவருதலாகிய  கடப்பாடுடையவல்ல,  தொகை
பெற்றும் வரும், பெறாதும் வரும்.
 

எ-டு : "உயர்திணைக்  குரிமையும்  அஃறிணைக்  குரிமையும்  ஆயிரு
திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ உருபின  தோன்ற  லாறே"  என
உம்மை எண்ணும், நிலனென நீரெனத் தீயென வளியென  நான்கும்,  என,
எனவென்  எண்ணும்  தொகைபெற்று  வந்தன.  "இசையினும்  குறிப்பினும்
பண்பினும்  தோன்றி"  என  உம்மை   எண்ணும்   உடலென,  உயிரென
இன்றியமையா, என எனவென் எண்ணும் தொகைபெறாது வந்தன.  'என்று'
என்னும்  இடைச்சொல்  என  என்பதனொடு  பொருளான்  ஒத்ததாகலின்
'என்று'  என்பதற்கும்  இவ்விதி  ஒக்குமெனக்  கொள்க.  இஃது உரையிற்
கோடல் என்னும் உத்தி.
 

சூ. 289 :

எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும்

எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர்

(40)
 

க-து:

ஏகார எண்ணிடைச் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

உரை:எண்ணுக்குறித்துவரும்   ஏகாரம்    சொற்றொறும்   வாராமல்
இடையிட்டு   வரினும்   செவ்வெண்ணாகநின்ற    சொற்கள்   எண்ணுதற்
பொருட்டாயே நடக்கும் என்று கூறுவர் புலவர்.