ஒரு பொருளைக் கருதி உணர்வதற்கு அப்பொருளையே அடிப்படையாகக் கொண்டு சொற்கள் தோற்றுவிக்கப்படுதலின் பொருளைச்சுட்டாத வெறுமைச்சொல் என்பது ஒன்றில்லை என்பது நூலோர் முடிபு. இதனை "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" என்கிறது தொல்காப்பியம். பொருள்களை உயர்திணை, அஃறிணை என வகுத்துக் கொண்டமையான் அவற்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றும் சொற்களும் இரு வகையாக அமைவனவாயின. |
மக்கட்சுட்டாகிய உயர்திணைப்பொருளுள் ஆண்பெண் என்னும் இருபிரிவுகள் உள்ளமையான் தனி ஓர் ஆண்மகனையும் பெண் மகளையும் குறிப்பதற்குரிய குறியீடுகளும் அவர்தம் குழுவினைக் குறிப்பதற்குரிய குறியீடும் இன்றியமையாதனவாகலின் அக்குறியீடு காரணமாக உயர்திணை மூன்று பால்களாக விரிகின்றது. இதனைத் தொல்காப்பியம். |
ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே |
(சொல்-2) |
எனப்பகருகின்றது. அஃறிணையுள் ஒருசில விலங்குகள், பறவைகள் தவிர ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் ஈறாக உள்ள பலவற்றுள் ஆண், பெண் பகுப்பு உணர்த்தற்கரியதாக உள்ளமையானும் நீர்நிலம் முதலாய உயிரில்லாத பருப்பொருள்களுள்ளும் அன்பு, அருள், நன்மை, தீமை முதலாய அருவப் பொருளுள்ளும் ஆண்மை, பெண்மை கோடற்கின்மையானும் அஃறிணையை ஒருமை, பன்மை தேர்ந்துணர்தற்குரிய இருபால்களாக அமைத்தனர் தமிழ் நூலார். இதனை, |
"ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே" |
(சொல்-3) |
எனப் புலப்படுத்துகின்றது தொல்காப்பியம். |
அங்ஙனம் அமைந்த இருதிணை ஐம்பால்களே ஒருமையும் பன்மையுமாகிய எண்களை உணர்த்தி நிற்றலின் பாலின் வேறாக 'எண்' என்பதொரு பகுப்பைத் தமிழ் நூலார் வகுத்துக்கொண்டாரிலர். |
புல்பூண்டு மரஞ்செடி கொடிகளாகிய ஓரறிவுயிருள்ளும் இரண்டு முதல் ஐந்தறிவு வரையுள்ள புழு பூச்சி முதல் விலங்கீறாகவுள்ள உயிர்களுள்ளும் பல்வேறு வகை இனங்கள் (சாதிகள்) உள்ளமையான் அஃறிணைப் பெயர்கள் பலவாக அமைந்துள்ளன. மக்கட் சாதி ஒன்றே யாகலின் மக்களுள் ஒவ்வொருவரையும் சுட்டி உணரப் பல்வேறு இடுகுறிப்பெயர்கள் அமைவனவாயின. |