தோன்றித் திரிந்து வேறுபடவருதலுமாம், அவ்வாற்றான் அவை வருமிடமும் சார்பும், கூறுவோன் குறிப்பும் பற்றி, இவை புணரியலுக்குதவ வந்தன - இவை பால் காட்டவும் - இவை உருபின் பொருட்டாயும் - இவை காலங்குறித்தும் வந்தன. இவை அசை நிலையாயும் இவை இசை நிறையாயும், இவை தத்தம் பொருளவாயும் வந்தன என அறிக என்றவாறு, ஒப்பில் வழியாற் பொருள் செய்வன உவமவியலுள் பெறப்படும். |
எ-டு: "சொல்லென் தெய்ய நின்னொடு பெயர்ந்தே" "சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்" "அறிவார் யாரஃ திறுவுழி இறுகென" "பணியுமாம் என்றும் பெருமை" "ஈங்காகுநவால் என்றிசின் யானே" "செலீஇயர் அத்தைநின் வெகுளி" "செய்வினை மருங்கின் செலவயர்ந் தியாழநின் கைம்முனை வல்வில் ஞாணுளர் தீயே" என இங்ஙனம் வந்தன வற்றுள், தெய்ய - மாள - என - ஆம் - ஆல் - அத்தை - யாழ என்பவை அசைநிலையாய் வந்தன. |
"குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே" எனத் தொறு என்பது சார்ந்த பொருளைப் பன்மைப்படுத்து நின்றது. "அஆ இழந்தானென் றெண்ணப்படும்" என ஆகாரம் இரக்கக் குறிப்புணர்த்தி நின்றது, இவ் ஆகாரம் "ஆ ! இஃதறிந்தவாறு" என வியப்புணர்த்தியும் வரும். பொள்ளென ஆங்கேபுறம் வேரார்" இதன்கண் என என்பது விரைவுணர்த்தி நின்றது, "கொம்மென" என்பது பெருக்கங் குறித்து நின்றது, "எப்பொருளாயினும்" எனவும் "எவ்வயிற்பெயரும்" எனவும் வருமிடங்களுள் எகரம் எஞ்சாமைக் குறிப்புணர்த்தி நின்றது. எக்கடல், எவ்வீடு, எந்நூல் என்னுமிடத்து எகரம் வினாப் பொருள் குறித்து நின்றது. |
பிறவும் இவ்வாறு சான்றோர் வழக்கினுள் வருவனவற்றை எல்லாம் ஓர்ந்து அமைத்துக் கொள்க. |
இடையியல் முற்றியது |
8. உரியியல் |
உரிச்சொல்லின் இயல்பாமாறு கூறுதலின் இவ்வியல் உரியியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயராதற்கும் வினையாதற்கும் உரியதாகலின் உரிச்சொல் எனப்பெற்றது. உரிச்சொல் - உரியதாகிய சொல் என விரியும். |