அக் குறைச்சொற்கள், பெயர்ச்சொல், வினைச்சொற்களுக்கு முதனிலையாதற்கேற்ற எழுத்தொடு கூடிப் பொருள் தருதற்கு ஏற்ப நிற்கும்நிலை நிரம்பிய உரிச்சொல்லாகும், இதனைப் பகுதி என்றும் முதனிலை என்றும் கூறுவர். அங்ஙனம் உருப்பெற்று நிரம்பிய சொற்கள் இசை, குறிப்பு, பண்பு என்பனவற்றுள் ஏற்புடையவற்றைச் சார்ந்து பால் காட்டும் இடைச்சொற்களொடு கூடிப் பெயர்ச் சொல்லாயும், பாலொடு காலங்காட்டும் உறுப்புக்களொடு கூடி வினைச்சொல்லாயும் முழுமை பெறும். பால் முதலியவற்றைக் காட்டும் உறுப்புக்களொடு கூடாத வழி அவை பெயரினும் வினையினும் தன்வடிவு (உருபு) தடுமாறுதற்குரியவாய்ப் பொதுப்பட நிற்கும். அந்நிலைமைக்கண் ஓர் உரிச்சொல் பலபொருட்கும், பல உரிச்சொற்கள் ஒரு பொருட்கும் உரிமை தோன்ற நிற்கும். |