304உரியியல்

வேற்றுமைகோடற்கும்     காலங்காட்டற்கும்     இயலாமல்    திரிபுற்றுப்
பெயர்ப்போலியாயும்   வினைப்போலியாயும்     நிற்கும்   நிலைமைக்கண்
அவை உரிச்சொற்கள் எனப்படும்.
 

எ-டு : "உற்"   என்னும்   குறைச்சொல்   உறு-உற   என   நிற்றல்
நிரம்பிய நிலையாம். உறவு  உறவை   உறவொடு   உறவுக்கு   எனவரின்
பெயராம்.  உற்ற,   உற்று - உறல்,   உறுதல்   எனவரின்   வினையாம்.
உறுபொருள்,     உறுகால்       எனஅடையாகவரின்   உரிச்சொல்லாம்.
பிறவிளக்கங்களைப் பின்னர்க்காண்க.
 

வேற்றுமை   கோடற்கும்   காலங்காட்டற்கும்    இயலாமல்   திரிந்து
நிற்கும் நிலைமைக்கண் அவை பெயரையும்  வினையையும்   சார்ந்து  தம்
பொருள் உணர்த்தியும்,   பெயர்வினைகளின்   மருங்காகவந்து  அவற்றின்
பொருளைச்   சிறப்பித்தும்   நிற்கும்.  இதனை  ஆசிரியர்'  'இடைச்சொற்
கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி  மருங்கிற்  றோன்றும் என்ப'
(பெய - 5) 'உரிச்சொன் மருங்கினும்  உரியவை  உரிய'  (எச் - 60) எனக்
கூறுமாற்றான் அறியலாம்.  அங்ஙனம்  தனித்துத்  தம்பொருள்  உணர்த்தி
வருங்கால் அவை பெயரை  ஒத்தும்  வினையை ஒத்தும் நிற்கும். அவற்றை
உரையாசிரியன்மார்   பெயர்ப்போலி   எனவும்   வினைப்போலி  எனவும்
குறிப்பிட்டு வழங்குவர்.
 

பெயர்வினைகளைச்   சிறப்பித்து  அவற்றிற்கு  அடையாக  வருங்கால்
பெரும்பான்மையும்  பண்புணர்த்தும்   சொற்களே   வரும்,   சிறுபான்மை
ஏனையவும் வரும்.
 

இனி, "உயிரும்   புள்ளியும்   இறுதி   யாகி நெறிப்பட வாராக் குறைச்
சொற்கிளவி"களுள்   உயிரீறாக   வருவன   ஓரெழுத்துச்   சொல்லாகவே
முகிழ்த்து நிற்கும், ஆதலின் பொருட் குறை நிரப்பப் பிற  எழுத்துக்களைக்
கூட்டும்   நிலை  பெரும்பான்மையும்  அவற்றிற்கின்மையான்   நெறிப்பட
வாராமை  ஒன்றே  அவற்றிற்கு  இலக்கணமாகச்  செல்லும்,  புள்ளியீற்றுச்
சொற்கள்   ஓரெழுத்துச்  சொல்லாக  வருதற்கு   ஏலாமையான்   அவை
ஈரெழுத்து முதலாக வந்து பொருட்குறை கூட்டத்தக்க பிற எழுத்துக்களொடு
கூடி நிரம்பி  நிற்கும்.  இவற்றுள்ளும் ஒருசாரன பிற எழுத்தொடு கூடாமல்
தாம்  தோன்றிய  நிலையானே  பொருள்  நிரம்பி  நிற்கும்.  ஓரெழுத்துச்
சொல்லாய்   நிரம்பி   வரும்   ஆ, ஈ, ஊ, நீ, கா, வீ  என்பன  போன்ற
உயிரீற்றுச் சொற்களின் பொருள் தெற்றெனப் புலப்படுமாறு  போல  உற் -
கட் - பச் எனக்  குறைச்  சொல்லாக  நிற்கும்  புள்ளியீற்றுச்  சொற்களின்
பொருட்காரணங்கள்  தெற்றெனப்  புலப்பட  நில்லா;  எனினும்  எல்லாச்
சொற்களும்