4சொல்லினக் கோட்பாடுகள்

மக்களுக்கு  இடப்படும்   பெயர்கள்   காரணம்   பற்றியும்  பற்றாதும்
அமையும்.    அவையாவும்     அஃறிணைப்     பொருட்     பெயரின்
அடிப்படையிலேயே  தோன்றி  நிற்கும்.  ஒரு  பெயரே ஆண் மகனுக்கும்
பெண்  மகளுக்கும்  அமைந்துவிடும்.  அதனான்  அவ்விடு  பெயர்களைக்
கொண்டு   திணையும்   பாலும்   உணர்தல்    அரிதாகும்.   அவ்வாறே
அஃறிணையுள்  ஒரு  சாதியாக  உள்ள   பொருள்களைப்  பிரித்துணர்த்த
வேண்டின்   இடுபெயர்களாலேயே   உணர்த்தல்    இயலும்.   ஆதலான்
இருதிணையுள்ளும்   திரிபின்றிப்  பாலுணர்த்தும்  பெயர்ச்சொற்கள்  மிகச்
சிறுபான்மை     (சுட்டுப்பெயர்,    வினாப்பெயர்    முதலியன)     யாக
அமைவனவாயின.  ஆதலின்  பெயர்ச்சொற்களின் அடிப்படையில் திணை,
பால்களை   வரையறை   செய்தல்    கடை    போகாமை    உணர்ந்து
வினைச்சொற்கள் வாயிலாக அவற்றுள்ளும்  படர்க்கை வினைச் சொற்களின்
வாயிலாக ஐம்பாற் பொருள்களை வேறுபடுத்துணரும் முறையிற் சொல்லாக்க
மரபிற்கு   இலக்கணம்   வகுத்துச்சென்றனர்   தமிழ்  நூலார்.  இதனைத்
தொல்காப்பியம்,
 

இருதிணை மருங்கின் ஐம்பா லறிய
ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே 

(சொல்-10)
 

என  விளம்புகின்றது.   எனினும்  பெயருள்  பால்வரைந்துணர்த்துவனவும்
உளவென்பதை,
 

வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே 

(சொல்-11)
 

என்னும் சூத்திரத்தான் அறிவுறுத்துகின்றார் தொல்காப்பியர்.
 

இனி,  உலகத்துப்  பொருள்கள்  பல்வேறு   இனமாகத்  (சாதிகளாகத்)
திகழ்கின்றமையான்  பெயர்கள்  வேறுவேறாக அமைவனவாயின. ஆயினும்
அவைபற்றிய  வினைகள்  பொதுவாக  அமைதலின் வினையை உணர்த்தும்
முதனிலைச்  சொற்கள்  ஐம்பாலுக்கும்   பொதுவாக   உள்ளன.  எனவே
ஐம்பாற்பொருள்களுள்  ஒன்று  ஒரு    வினையை   மேற்கொண்டகாலை
அப்பொருள் இன்னபால் என்பதனை உணர்த்த அவ்வினை நிகழ்வு பற்றிய
குறிப்போடு  ஒரு  துணைக்குறியீட்டைச் சேர்த்தாலன்றி உணர்த்த இயலாது.
அங்ஙனம் சேர்க்கப்படும் ஒட்டுக்களைத் தமிழ் நூலார் இடைச்சொல் எனக்
குறியீடு செய்துவகுத்து அமைத்துக் கொண்டுள்ளனர்.
 

அங்ஙனம்   வினைச்    சொல்லின்   இறுதிநின்று   திணைபால்களை
வரையறுத்துணர்த்தும்  இடைச்  சொற்களே  பெரும்பான்மையும்  பொருட்
பெயர்களின் இறுதியிற் சேர்ந்து திணைபாலுணர்த்தும்