சொல்லினக் கோட்பாடுகள்5

பெயர்ச்  சொற்களாகின்றன.  அங்ஙனம்  தனி  ஒரு  தொழிற்பெயராகவும்
பொருட்பெயராகவும்   இருந்த    சொல்லை    இவ்    இடைச்சொற்கள்
பாலுணர்த்தும் சொற்களாக வேறுபடுத்து வரையறை செய்தலின்,
 

இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே 

(சொல்-250)
 

இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே 

(சொல்-456)
 

எனக் கூறுகின்றது தொல்காப்பியம்.
 

தொழிற்சொற்களைக்     காலக்குறிப்பொடு      பாலுணர்த்தவைக்கும்
ஆற்றலுடைமையான்    அவ்   இடைச்சொற்கள்    பெயரைச்    சார்ந்து
அமையுங்கால்  அப்பெயர்ச்  சொற்களுக்கு  அவை வினைத்தன்மையையும்
ஊட்டி  விடுகின்றன.  அவ்வினைத்தன்மை   சூழலை   நோக்கி   நிற்கும்.
அதனான்   இறுதியில்  இடைச்சொற்களைப்  பெற்று   நிற்கும்   பெயர்ச்
சொற்களே குறிப்புவினைச் சொற்களாக ஆக்கம் பெறுகின்றன.
 

தொழிற்சொற்களின்   இறுதிக்கண்      வரும்     இடைச்சொற்களை
இருபத்தொன்பதாக   வகுத்துக்  கூறுகின்றது  தொல்காப்பியம்.  அவற்றுள்
னஃகான் ஒற்று முதலாய பதினோரு இடைச்சொற்கள் சிறப்புடையனவாகும்.
 

வினை என்பது பொருளான் மேற்கொள்ளப்படுவதாகலின் ஒரு பொருள்
ஒருவினையை மேற்கொள்ள முற்படும் நிலையில் அப்பொருட்கு அவ்வினை
எதிர்கால  வினையாகும்.  மேற்கொண்டு  ஆற்றுகின்ற   நிலையில்  அது
நிகழ்கால வினையாகும்.  அங்ஙனம்  ஆற்றுதலை விட்டு நீக்கிய நிலையில்
அது  இறந்தகால  வினையாகும்.  அதனால்   தமிழ்    நூலார்   மூன்று
காலங்களையே    வகுத்துக்     கொண்டனர்.    வடநூலார்     வகுத்த
ஏனைக்காலங்கள்  இவற்றுள்  அடங்கி  நிற்றலை  அறியலாம்.  இம்மூன்று
காலத்தையும்  சொல்லகத்துப்  புலப்படுத்து நிற்பதும் இடைச்சொல்லேயாம்.
காலத்தைப்    புலப்படுத்தும்     இடைச்சொற்கள்     வெளிப்படையாகப்
பிரித்துணருமாறும்   நிற்கும் ;   பிரித்துணர  இயலாமல்  அச்சொல்லொடு
ஒன்றுபட்டு  அதனுட்  கரந்தும்  நிற்கும்.  ஆதலின் கால இடைச்சொற்கள்
இவை  எனக்கிளந்து  கூறாமல்   "வினைசெயல்   மருங்கிற்   காலமொடு
வருநவும்"     (சொல்-251)       எனவும்,       வினைச்     சொற்கள்
ஒருமொழிப்புணர்ச்சியாகலின்  "புணரியல்  நிலையிடை உணரத் தோன்றா"
(எழுத்து-482)  எனவும் ஆசிரியர்  இசைத்துச் சென்றார். நன்னூல் முதலாய
பின்னூல்கள்  கடைபோகாவகையிற்  பிரித்துக்  கூறியுள்ளன.  காலக்கிளவி
என்பது   வினைச்சொற்களிடத்து   மெய்ப்பாடு  போல அமைந்து நிற்கும்
இயல்பினதாகும்.