6சொல்லினக் கோட்பாடுகள்

சொற்பாகுபாடுகள்
 

சொல்லாக்கத்திற்கும்  சொற்றொடராக்கத்திற்கும்  காரணமாக அமையும்
ஓரெயெழுத்தொருமொழி  முதலாய  மூவகை  மொழிகளையும்   தொடராக்க
அடிப்படையிற்  பிரித்துணர   இலக்கண  நோக்கில்  சொற்களைப்  பெயர்
வினை  இடை  உரி  என்றும்,  பாட்டுஉரை  நூல்  முதலாய  எழுவகைச்
செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல் திரிசொல்
திசைச்சொல் வடசொல் என்றும் தொன்னூலோர் வழிநின்று தொல்காப்பியம்
பாகுபாடு  செய்துணர்த்துகின்றது.  எழுவாயும்  பயனிலையுமாக  அமையும்
தொடர்மொழியமைப்பின்கண்   சொற்கள்   இணைந்து   பொருள்பயக்கும்
நோக்கில் தொகைச்சொல், தொகைமொழி என இருவகைப்பாகுபாடுகளையும்
அறிவிக்கின்றது.   இவையெல்லாம்,   பொருளுணர்த்தும்   முறைமையான்
வெளிப்படைச்சொல்,   குறிப்புச்சொல்   என    இருகூறாக    அடங்கும்.
அவைபற்றிய இன்றியமையாத குறிப்புக்கள் பின் வருமாறு.
 

பெயர்ச் சொல்:
 

பொருள் பற்றியும், இடம்  பற்றியும், குணம் பற்றியும், தொழில் பற்றியும்
குறியீடாகவரும்   பெயர்ச்    சொற்களுள்   இருதிணை    ஐம்பால்களை
வரையறுத்துணர்த்துவன  மிகச்   சில.   ஏனையவை    இருதிணைகட்கும்
பொதுவாக நிற்கும்.   அதனான்  பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர்,
அஃறிணைப்  பெயர்,  இருதிணைப்  பொதுப்பெயர்   என   மூவகையாக
வகுத்துக்   கொண்டு  அவற்றின்  இலக்கணத்தை   விரித்துணர்த்துகின்றது
தொல்காப்பியம்.  ஒருசார்  பெயர்கள்  இருதிணைக்கும் பொதுவாக நிற்கும்
என்பதன்றிப்  பொதுத்திணை   என்று    ஒன்றில்லை   அதனால்   அப்
பொதுப்பெயர்கள்   முன்னும்   பின்னும்   வரும்   சிறப்புப்பெயர், சிறப்பு
வினைகளான் இருதிணையுள் ஒன்றனுள் அடங்கிவிடும்.
 

உயர்திணையுள்    தன்மைப்பெயர்    சுட்டுப்பெயர்    வினாப்பெயர்
பன்மைப்பெயர் தவிர்ந்த ஏனைய இடுபெயர்கள் யாவும் விரவுப்பெயராகவே
நிற்கும்.  அஃறிணையுள்  இனம் பலவாகலின்  அஃறிணைப் பெயர் யாவும்
ஒருமைக்கும்  பன்மைக்கும்  பொதுவாய்  நிற்கும்.  அவற்றை  அஃறிணை
இயற்பெயர் என்றார். அவை உயர்திணைக்கண் இறுதி இடைச் சொல்லின்றி
இடுபெயராகவும்  அமையும்.  ஆதலின்  பொதுப்பெயர்  பற்றிய இலக்கண
மரபுகளை ஆசிரியர் விரித்துக் கூறுகின்றார்.
 

அர்  ஆர்   மார்   என்னும்   இறுதி   இடைச்சொல்லொடு   கூடிய
உயர்திணைப்  பன்மைப் பெயரும் கள் என்னும் இறுதி இடைச்சொல்லொடு
கூடிய அஃறிணைப் பெயரும் அவ்வத்திணைகட்கே