க-து: | மேல் விதந்து கூறிய உரிச்சொற்களின் பொருள்பற்றியதொரு புறனடை கூறுகின்றது.
|
|
உரை:உரு என்பது முதலாக எறுழ் என்பதீறாகக் கூறப்பெற்ற உரிச்சொற்களுக்கு ஓதிய பொருள் நிலை அல்லாதனவாய் வேறுபிற பொருள் சான்றோர் வழக்கிற் றோன்றிவரினும் அவற்றையும் கூறப்பட்டனவற்றொடு கொள்க. சொல்லாக்கம் உயர்ந்தோர்மாட்டாய்க் காலந்தொறும் அமைந்து வருதலின் "தோன்றினும்" என எதிர்கால வாய்பாட்டாற் கூறினார். |
எ-டு : "புரைதீர் கேள்வி" என்புழிப் புரைஎன்பது குற்றம் என்னும் பொருள் குறித்து நின்றது. கழுமமுடித்த கண்கூடுகூழை என்புழிக் கழுமம் என்பது திரட்சி என்னும் பொருள் குறித்து நின்றது. 'நுணங்கு நுண் கொடிமின்னார்' என்புழி 'நுணங்கு' என்பது நுடக்கம் என்னும் குறிப்புணர்த்தி நின்றது. கடிநாறுபூந்துணர் என்புழிக் கடி என்பது மணத்தல் என்னும் குறிப்புணர்த்தி நின்றது. கடிமுரசு என்புழி ஆர்த்தல் என்னும் இசைப்பொருள் உணர்த்தி நின்றது. பிறவும் பிறபொருள் பற்றிவரின் இவ்வாறே கண்டுகொள்க. |
சூ. 392 : | பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே |
(95) |
க-து: | "எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்" (உரி - 1) எனவும் "ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்" (சூ-90) எனவும் 'கிளந்துரைக்க', எனவும் 'உணர்ந்து உணர்த்துக' எனவும் கூறிய உரிச்சொற்களை உணர்த்தும் மரபு கூறுமுகத்தான் பொருட்குப் பொருள் தெரிதல் கடை போகாதெனச் சொற்பிறப்பாய்வுக்கு வரையறை கூறுகின்றது. இச்சூத்திர முதலாக ஐந்து சூத்திரங்கள் உரிச்சொற்களைப் பற்றிய ஒழிபிலக்கணமாகும். |
|
உரை:நெறிப்படவாராக் குறைச் சொற்கள் இசை குறிப்பு பண்பு என்னும் அடிப்படையிற்றோன்றிப் பொருட்குறை (ஏற்ற எழுத்தினைக் கூட்ட உரிச் சொல்லாய் நிரம்பியவழிப் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்துங்கால், ஓர் உரிச்சொல்லின் பொருளாக உரைக்கப் பெற்ற சொல்லின்பொருள் யாதெனத் தொடர்ந்து ஆராயப்புகின் அவ்ஆராய்ச்சிக்கு வரம்பின்றாம். |
பொருளுணர்த்தும் சொல்லைப் பொருள் என்றார். ஒரு சொல்லின் பொருள்நிலையைப் பிறிதொரு சொல்லான் உணர்த்தியவழி உணர்த்திய சொல்லின் பொருள் யாதென வினவின் பிறிதொரு சொல்லான் உணர்த்தல் வேண்டும். |