உரியியல்335

அங்ஙனம்   மேலும்  மேலும்  கூறும்  சொற்களின் பொருளை ஆராய்ந்து
கொண்டே  சொல்லின்  அவ்வினாவிற்கோர்  எல்லையின்றாகும்  என்பார்
"வரம்பின்றே"  என்றார்.   இதனான்  சொல்லாராய்ச்சி   ஒரு  வரம்பிற்கு
உட்பட்டதாக அமைதல் வேண்டும் என உணர்த்தப்பட்டது.
 

சூ. 393 :

பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்
(96)
 

க-து:

சொற்பொருள்         உணர்த்துவோன்          உணர்த்தும்
திண்மையுடையனாதல் வேண்டும் என்கின்றது.
 

உரை:பொருட்குப்   பொருள்தெரியும்   நிலைமை   நேர்வது  ஓர்
உரிச்சொல்லின் பொருளைப்  பிறிதொரு   சொல்லால்   உணர்த்தியவழிக்
கேட்போற்கு அதுவும் புலனாகாத போதன்றே? ஆதலின் உணர்த்துவோன்
கேட்பவன் உணரும் வாயிலறிந்து   உணர்த்தவல்லனாயின்   தான் கூறிய
சொற்பொருட்குத்  திரிபின்றாம்.  எனவே, கேட்போன் திரிபின்றி உணரும்
என்றவாறு.
 

உணர்த்தும் வன்மையாவது:   உறுகால்   என்பதற்கு   மிகுதி என்னும்
பொருள்   கருதிக்     கூறுமிடத்துக்    கேட்போன்   மிகுதி   என்னும்
சொற்பொருளை அறியான் எனத்  தெரியின்,   மிகுந்த  காற்று  எனவாளா
கூறாமல்   மரங்கள்   சாயுமாறு   வீசும்    மிகுந்த     காற்று    எனத்
தொடர்மொழியான் உணர்த்தலும், புயல் போலும்   மிகுந்த   காற்று  என
உவம  வாயிலாக  உணர்த்தலும்,   அவன்   திரிபின்றி   உணர்தற்கேற்ற
பிற   வாயிலான்  உணர்த்தலுமாம்.   தொடர்  மொழியாற்   கூறுதலாவது
மிகுதி என்னும் ஒரு சொல்லாற் கூறாமல் 'அளவு கடந்த' என்றாற்போலப்
பல சொற்களைக் கூட்டிக் கூறுதலாம்.
 

சூ. 394 :

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே
(97)
 

க-து:

உணர்த்தல்     வன்மை      வேண்டுமென்பதற்கோர்   ஏதுக்
கூறுகின்றது.
 

உரை:சொற்பொருள்   உணர்த்துங்கால்   அதனை   உணர்வோரது
உணரும்வாயில் அவரது அறிவு நிலையை வலியாக உடையதாகும்.
 

என்றது; உணர்வோரது   அறிவுவன்மைக்கேற்ப உணர்த்தல் வேண்டும்
என்பதும்,    அங்ஙனம்     உணர்த்தின்     உணர்த்தும்   பொருட்குத்
திரிபில்லை என்பதும் கூறியவாறு.