சூ. 395 : | மொழிப்பொருட் காரணம் விழப்பத் தோன்றா |
(98) |
க-து: | சொற்பொருளை, வல்லோன் உணர்ந்து உணர்த்தல் வேண்டும் என்பதற்குக் காரணங் கூறுகின்றது. |
|
உரை:உரிச்சொல்லாகி வரும் மொழியினது பொருட்கு ஓதப்பெற்ற காரணங்கள் கண்கூடாகத் (விழிப்ப) தோன்றுதல் இலவாகும். [கண்கூடாதல்-வெளிப்படையாக விளங்குதல்.] |
வெளிப்படையாகத் தோன்றா எனவே கருதல் முதலிய அளவைகளான் தோன்றுமென்பதாயிற்று. ஓரெழுத்துமொழி முதலாகிய மூன்றும் பொருளான் முழுமை எய்திய வழியே அவை மொழி எனப்படுமாதலின் மொழி என்பது காரணக்குறியீடாதல் தேற்றம். நிரம்பிய உரிச்சொற்கள் குறைச்சொற்களின் பொருட் குறை கூட்ட முழுமை பெற்றுத் திகழ்வனவாதலின் அந்நுண்மை தோன்றச் சொற்பொருட்காரணம் என்னாமல் மொழிப்பொருட் காரணம் என்றார். அக்காரணங்கள் இசையும் குறிப்பும் பண்புமாகிய மூன்றென ஓதப்பட்டமையான் தோன்றா எனப் பன்மையாற்கூறினார். |
இந்நான்கு சூத்திரங்களும் உரிச்சொல்லுக்குரியவாய் ஓதப்பெற்றன வாயினும் இம்மரபுகள் ஏனைய சொற்களுக்கும் உரியவாகும். என்னை? எல்லாச் சொற்களுக்கும் அடிமணை உரிச்சொற்களேயாதலின் என்க. |
உறுகால் என்புழி 'உறு' என்னும் சொல் குறிப்பு அடிப்படையாகத் தோன்றியதென்பதனை இயல்பான காற்று மிகாது சலிக்கும் நிலைமையொடு ஒட்டியும் உற் என்னும் உணர்வை ஒட்டியும் உணரவேண்டுதலானும், "மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே" என்புழிப் 'பசப்பு' என்னும் சொல் நிறவேறுபாட்டினை உணர்த்தும் பண்பு, பாசிலை என்பது போல வெளிப்படத் தோன்றாமல் முகத்தின் இயல்பாகிய ஒளிமாறி வேறுபட்டு நிற்கும் நிலையினைக் கண்டும் 'பச்' என்னும் அதன் வேர் நிலையை உணர்ந்தும் அறிய வேண்டுதலானும், கம்பலை மூதூர் என்புழிக் 'கம்பலை' என்னும் சொல் அரவப் பொருள் உணர்த்துதற்குரிய இசைக் காரணத்தை அச்சொல் அவ்விடத்து வேறு பொருட்கு இயைபின்றி நிற்கும்நிலைக்கண்டும் கம் அல் ஐ-(கம்பலை) என்னும் மூன்றுவேர்நிலையொடு நிற்பதைஓர்ந்தும் உணரவேண்டுதலானும் "பொருட் காரணம் விழிப்பத்தோன்றா" என ஆசிரியர் கூறியதன் கருத்து விளங்கும். |