இவ்ஆராய்ச்சி இருதிணைப் பொருளையும் இடமாகக் கொண்டு தோன்றும் உரிச்சொற்கள், அங்ஙனம் தோன்றுதற்குரிய மூவகைக் காரணங்களைப் பற்றியதன்றிச் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றியதன்று என அறிக. ஆதலின், இச்சூத்திரத்திற்கு உரையாசிரியன்மார் கூறும் விளக்கமும் இக்கால ஆய்வாளர் தரும் விளக்கமும் ஈண்டைக்கு ஏற்புடையனவல்ல எனவிடுக்க. இச்சூத்திரம் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சியாயின் ஆசிரியர் இதனை ஈண்டுக் கூறாமல் "எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே" என்றதன்பின் அமைத்தோதியிருப்பார் என உணர்க. |
சூ. 396 : | எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே |
(99) |
க-து: | உரிச்சொற்கள் முதனிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்திசைத்தல் மரபன்று என்கின்றது. |
|
உரை:(உரிச்சொற்களின் பொருட்காரணங்களை நுணுகி நோக்குமிடத்தும் நெறிப்படவாராக் குறைச்சொற்கிளவிகளின் பொருட்குறை நீக்க எழுத்துக்களைக் கூட்டி நிரப்புமிடத்தும் அவை முதனிலையும் இறுதிநிலையுமாக அமைந்து பின்னர்க்கூடி நிற்றலின் அங்ஙனம் இயைந்துள்ள முறைமையான் இவை பிரிந்து இசைக்குங்கொல் எனக் கருதற்க, உரிச்சொல்லின்கண் நிற்கும் எழுத்துக்கள் முதனிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்திசைத்தல் இலக்கண நெறியின்றாம். |
என்றது; உரிச்சொற்களைப்பிரித்துப்புணர்ச்சி விதிகாணுதல் கூடாது என்றவாறாம். 'இவண் இயல்பின்றே' என்றதனான் ஏனைப் பெயர்வினைகளிடத்துப் பிரித்துக்காணுதல் இயல்பாம் என்பது உய்த்துணரப்படும். ஈண்டுப் பெயர் என்றது ஒட்டுப் பெயர்ச்சொற்களை, இதனைச் "சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்" என்பதன் பாற்படுத்துக் கண்டு கொள்க. |
அங்ஙனமாயினும் ஒரு சொல்லாக நிற்கும் பெயர்ச்சொல், வினைச்சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகப் புணர்ச்சிவிதி காணுதற்கு ஏலா என்பதை ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே (எழுத்து - புணர்-6) என்பதனான் அறிக. அவை பிரிந்திசைக்கும் என்பதனை "னஃகான் ஒற்றே" (கிளவி-5) "அம்மாம் எம்மேம் என்னும் கிளவியும்" (வினை-5) என்பவை முதலாக ஓதிய சூத்திரங்களான் உணர்க. |