வாகக் கூறுவர். அவ்விளக்கம் மொழியியலுக்கும் இந்நூல் நெறிக்கும் ஒவ்வாமையை ஓர்ந்து தெளிக. | திரிசொற்களுக்குச் சில எடுத்துக் காட்டு வருமாறு: வெற்பு, விலங்கல், ஓங்கல் என்பவை, மலை என்னும் ஒருபொருள் குறித்து வந்தன. ஏறு, ஏற்றை, போத்து என்பவை ஆண்பால் என்னும் ஒருபொருள் குறித்து வந்தன, வண்டு என்பது அறுகாற்சிறுபறவை-வளையல். தேர்உருள் முதலிய பலபொருள் குறித்து வந்தது. இவை பெயர்பற்றி வந்ததிரி சொற்கள். பிணித்தான், யாத்தான், வீக்கினான் என்பவை கட்டினான் என்னும் ஒரு பொருள் குறித்து வந்தன. வரைந்தான் என்பது எழுதினான், மணந்தான், வரையறுத்தான், நீங்கினான் என்னும் பலபொருள் குறித்து நின்றது. இவை வினைச் சொல் பற்றி வந்த திரி சொற்கள். | இனிக் கொங்கு, இறால், அளகு, நெய்த்தோர், அதோளி போன்ற பெயர்சொற்களும், உண்கு, காண்கு, வந்தீத்தை, சென்றீத்தை, என்றிசினோர், கண்டிசினோர், போன்ற வினைச் சொற்களும் இயல்பாக யாவரும் பொருள் உணர நில்லாது அரிதுணர் பொருளவாய்க் கற்றோர்க்கே விளங்க நிற்றலின் அவைபோல்வன திரிசொல்லின் பாற்படுமென்க. உண்ணாய் என்பது உடன்பாடும் எதிர்மறையும் ஒருங்குபற்றி நிற்றலும் செய்யும் என்னும் முற்று நான்கு பாலும் பற்றி நிற்றலும் கருதி இன்னோரன்னவற்றையும் திரிசொல் என்பாருமுளர். | பொருள் வேறுபாட்டானன்றிச் சொற்கள் பலவாகா ஆதலின் ஒவ்வொரு சொல்லும் நிமித்த வேறுபாடுடையனவேயாம். ஈண்டு ஒருபொருள் குறித்த பல சொல் என்றது. செய்யுட்கண் அவை ஒத்தபொருள் பயக்கும்வண்ணம் மாற்றுநிலைச் (பரியாயச்) சொற்களாகப் புலவோரான் ஆளப்படுதல் நோக்கி யென அறிக. அஃதாவது, மலையைக் குறித்து வரும் வெற்பு என்பது செறிவையும், ஓங்கல் என்பது ஓக்கத்தையும் விலங்கல் என்பது நிலத்தை ஊடறுத்து நிற்றலையும் குறிக்கும், இவையாவும் மலையின் பண்புகளேயாதலின் ஒரு பொருளன என்ப. இவ்வாறே ஒரு சொல் பல பொருளைக் குறித்தற் கண்ணும் அவ்வப் பொருள்களின் மாட்டு அமைந்துள்ள ஒத்ததொரு பண்பினைக் கருதி நிற்கும். அஃதாவது வண்டு என்பது வள் (வளைவு) என்னும் குறைச்சொல்லடியாகப் பிறந்ததொரு பெயராகும். இது சுழன்று பறத்தலான் வண்டிற்கும் வளைந்து அமைதலான் வளையலுக்கும் வளைந்து வட்டமாக அமைதலின் தேர் உருளுக்கும் பெயராயிற்று. இவற்றின் பிற பண்புகளைக் கருதின் தும்பி, தொடி, ஆழி, முதலிய வேறுவேறு சொற்களான் கூறப்படும் |
|
|